கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி வரும் மார்ச் முதல் வெளிச்சந்தை விற்பனைக்கு வரும்
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்தினை வரும் மார்ச் முதல் வெளிச்சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர இந்தியாவின் சீரம் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி
உலகை இன்றளவும் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியா உள்ளிட்ட முன்னணி நாடுகள் பலவும் தடுப்பூசிகளை உருவாக்கி அவற்றை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை நடத்தி வருகின்றன.
இங்கிலாந்து நாட்டின் பிரபல ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இறுதிக்கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்தின் மீது உலகளவில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முழு அளவில் பயன்பாட்டிற்கு தயாராகிவிடும் என்று தயாரிப்பு மற்றும் விநியோகம் உரிமம் பெற்றுள்ள இந்தியாவின் சீரம் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பெரு நிறுவனங்கள் பல தங்களது தொழிலாளர்களுக்காக அதிகளவில் தடுப்பூசி மருந்தை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக சீரம் கூறியுள்ளது. தடுப்பூசி மருந்துக்கு இந்திய அரசின் அனுமதி கிடைத்ததும் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் முதல் அதனை வெளிச்சந்தையிலும் விற்பனைக்கு கொண்டுவர சீரம் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இதனிடையே இரண்டுக்கட்ட சோதனைகளை கடந்து மூன்றாம் கட்ட சோதனையின் இறுதியில் இருப்பதால் கோவிஷீல்டு மருந்தை அவசர பயன்பாட்டிற்கு அனுமதி தரக்கோரி சீரம் நிறுவனம் இந்திய அரசிடம் முறையிட உள்ளது.
இந்த நிலையில் கோவிஷீல்டின் மருத்துவ பரிசோதனைகளின் போது தடுப்பூசி போட்டதைத் தொடர்ந்து மோசமான விளைவுகளை சந்தித்ததாகக் கூறப்படும் சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர், அது குறித்து விசாரிக்கவும், அவரது துன்பத்திற்கு வழிவகுத்த காரணங்கள் அறியப்படும் வரை சோதனைகளை நிறுத்தவும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்த போதும் , அதிகாரிகள் சோதனைகளைத் தொடர்ந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தியா டுடே டிவியுடன் தொலைபேசியில் பேசிய தன்னார்வலர், தடுப்பூசி சோதனைகள் “நிறுத்தப்படவில்லை” "நான் பாதகமான நிகழ்வுகளால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தபோது அவர்கள் தன்னார்வலர்களை அழைத்து தடுப்பூசிகளை வழங்கினர். பாதகமான எதிர்வினை இருப்பதால் சோதனைகளை நிறுத்த வேண்டும் என்று என் மனைவி கேட்டுக்கொண்டார், ”என்று அவர் கூறினார்.
தடுப்பூசியைத் தொடர்ந்து ஏற்படும் பாதகமான நிகழ்வுகள் தடுப்பூசி காரணமாக இருந்ததா அல்லது வேறு ஏதேனும் நிகழ்ந்ததா என்பது குறித்து அதிகாரிகள் சரியான மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story