இந்திய பெருங்கடல் பகுதியில் வாலாட்டினால் தக்க பதிலடி - சீனாவுக்கு கடற்படை தளபதி மறைமுக எச்சரிக்கை


Photo Credit: ANI
x
Photo Credit: ANI
தினத்தந்தி 4 Dec 2020 3:54 AM IST (Updated: 4 Dec 2020 3:54 AM IST)
t-max-icont-min-icon

இந்திய பெருங்கடல் பகுதியில் வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சீனாவுக்கு இந்திய கடற்படை தளபதி கரம்பீர் சிங் மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.

புதுடெல்லி, 

இந்திய, பாகிஸ்தான்போரின்போது, 1971-ம் ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி, பாகிஸ்தானின் 4 போர்க்கப்பல்களை இந்திய கடற்படை மூழ்கடித்தது. இதில், நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் கடற்படையினர் கொல்லப்பட்டனர். இந்திய கடற்படையின் இந்த சாதனையை, பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி டெல்லியில் நேற்று இந்திய கடற்படை தளபதி கரம்பீர்சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின் தொடர் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. அதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் தலா 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துருப்புகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். ஆயுதங்களும், தளவாடங்களும் குவிக்கப்பட்டு போர்ப்பதற்றம் நிலவுகிறது, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா ஒரு சவாலாக உள்ளது.

இதையொட்டி, சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கிற வகையில், “ இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஏதேனும் அத்துமீறல்கள் நடந்தால், இந்திய கடற்படைக்கென்று ஒரு வழிகாட்டும் நெறிமுறை உள்ளது. அதைச்செய்வோம்” என இந்திய கடற்படை தளபதி கரம்பீர்சிங் குறிப்பிட்டார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம் பி-81 மற்றும் ஹெரான் ட்ரோன் கள் (ஆளில்லா விமானங்கள்), கிழக்கு லடாக் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கடற்படை உயிர்ப்புடன் உள்ளது.

நாங்கள் என்ன செய்தாலும், அது இந்திய ராணுவத்துடனும், விமானப்படையுடனும் ஒருங்கிணைந்துதான் செய்வோம். இந்திய கடல் பிராந்தியத்தில் சவால்கள் இருக்கின்றன. இந்த சோதனையான கால கட்டத்திலும் இந்திய கடற்படை உறுதியுடன் நிற்கிறது.

இந்திய ஆயுதப்படைகளின் ஒருங்கிணைந்த முத்தரப்பு சேவை (எம்.டி.சி.) கட்டளையை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் சிறிது காலத்தில் இது வெளிவரும். இந்திய கடற்படையில் நீருக்கடியிலான செயல்திறனை மேம்படுத்துவதில் கடற்படை கவனம் செலுத்துகிறது. கடற்படையில் மூன்றாவது விமானம்தாங்கி போர்க்கப்பல் தேவை குறித்து தெளிவாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

Next Story