இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரத்து 916 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரத்து 916 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி கடந்த ஜனவரி இறுதியில் கண்டறியப்பட, முதல் கொரோனா மரணம் மார்ச் மாதத்தில் நிகழ்ந்தேறியது. கொரோனாவின் இந்த தொடக்க கட்ட நாட்களில் நாட்டில் தொற்று பரவலும், மரணங்களும் குறைவாகவே இருந்தன.
ஆனால் கண்ணுக்குத்தெரியா இந்த அரக்கனின் வீரியம் மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் உச்சத்தை எட்டியது. நாளொன்றுக்கு 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட புதிய பாதிப்புகளையும், ஆயிரக்கணக்கான மரணங்களையும் நாடு கண்டு வந்தது.
எனினும் அதற்குப்பின் இந்தியாவின் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. தற்போது அது சீரான எண்ணிக்கையில் குறைந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 36 ஆயிரத்து 594 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தை கடந்து விட்டது. குறிப்பாக 95 லட்சத்து 71 ஆயிரத்து 559 பேர் இதுவரை கொரோனாவின் பாதிப்புகளை அனுபவித்து இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
அதேநேரம் மேற்படி 24 மணி நேரத்தில் இந்தியா கண்டிருக்கும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையோ 540 ஆக இருந்தது. இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 188 ஆக உயர்ந்தது.
நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 95 லட்சத்தை கடந்திருந்தாலும், அந்தவகையில் 90 லட்சத்து 16 ஆயிரத்து 289 பேர் இதுவரை குணமடைந்து இருக்கின்றனர். இதில் இன்று காலை வரையிலான ஒரு நாளில் குணமடைந்த 42 ஆயிரத்து 916 பேரும் அடங்குவர்.
புதிய பாதிப்புகளை விட, புதிதாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது, இந்தியாவின் மருத்துவ கட்டமைப்பின் பெருமைக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.
நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் குணமடைந்திருப்பதால், சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 16 ஆயிரத்து 082 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 94.20 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.45 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 4.35 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,70,102 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 14 கோடியே 47 லட்சத்து 27 ஆயிரத்து 749 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story