பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது


கோப்புக்காட்சி
x
கோப்புக்காட்சி
தினத்தந்தி 4 Dec 2020 11:35 AM IST (Updated: 4 Dec 2020 11:35 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. வைரசுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. 

கொரோனா வைரஸ் தாக்கம் ஒருபக்கம் நீடித்து வரும் நிலையில், மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
 
பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லி நோக்கி பேரணியாக சென்றனர். அவர்கள் டெல்லி எல்லையில் தடுக்கப்பட்டதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டபோதும் தற்போதுவரை அரியானா-டெல்லி எல்லை பகுதிகளான சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் அமர்ந்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, மத்திய அரசு மற்றும் விவசாயிகளிடையே நடைபெற்ற 4-வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மீண்டும் நாளை பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மக்களவை, மாநிலங்களவை இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நிலவரம், கொரோனா தடுப்பூசி விவகாரம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணொலி ஆலோசனையில் மக்களவை, மாநிலங்களவை தலைவர்கள், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் பங்கேற்றுள்ளனர்.

Next Story