மருத்துவ பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படும்; பிரதமர் மோடி தகவல்
மருத்துவ பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசிக்க காணொலி மூலம் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் பேசுகையில், கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் வெற்றியடைவோம் என நம்முடைய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர் என்றார். இந்த உலகமே பாதுகாப்பான மற்றும் விலை குறைவான தடுப்பூசி மருந்தை பெறுவதில் கவனம் செலுத்துகிறது என்று கூறிய பிரதமர் மோடி, அதனால்தான் உலக நாடுகள் இந்தியாவை உன்னிப்பாக கவனித்து வருகின்றன என்றார்.
மேலும், இன்னும் சில வாரங்களில் கொரோனா மருந்து தயாராகும் என வல்லுநர்கள் நம்புகின்றனர் எனவும் விஞ்ஞானிகள் பச்சைக் கொடி காட்டியதும் தடுப்பூசி வழங்கும் பணி இந்தியாவில் தொடங்கும் எனவும் குறிப்பிட்டார்.கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் தீவிரமான உடல் நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி விலை தொடர்பாக மாநில அரசுக்களுடன் மத்திய அரசு பேசி வருகிறது என்று கூறிய பிரதமர் மோடி, இவ்விவகாரத்தில் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும், தடுப்பூசியை வழங்குவதில் மத்திய - மாநில அரசுக்கள் இணைந்து செயல்படுகிறது என்றும் மற்ற நாடுகளை ஒப்பீடுகையில் தடுப்பூசி வழங்குவதில் இந்தியா சிறப்பான அனுபவத்தையும், திறனையும் கொண்டிருக்கிறது என்று கூறினார். கொரோனா தடுப்பூசி விவகாரம் தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை அரசியல் கட்சி தலைவர்கள் தனக்கு அனுப்பலாம் என்று கூறியிருக்கும் பிரதமர் மோடி, கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என உறுதியளித்து உள்ளார்.
Related Tags :
Next Story