இறையாண்மையை காக்க முடியாத நாடுகள் நமது அண்டை நாடு போல் ஆகி விடும்: பாகிஸ்தானை சாடிய ராஜ்நாத் சிங்
நாடுகள் தங்களுடைய இறையாண்மையை பாதுகாக்க முடியாவிட்டால் நமது அண்டை நாடு போல் ஆகி விடும் என மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஆயுத படைகளுக்கான கொடி நாள் இணையவழி ஆய்வரங்கில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு இன்று பேசினார். அவர் பேசும்பொழுது, தங்களுடைய நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க முடியாத நாடுகள் நமது அண்டை நாடு போல் ஆகி விடும்.
அவர்களால் தங்களது சொந்த சாலையை அமைக்கவோ அல்லது அதனை நடந்து செல்ல பயன்படுத்தவோ முடியாது. அவர்களால் வர்த்தகம் செய்யவோ, பிறர் செய்யும் வர்த்தகத்தினை தடுத்து நிறுத்தவோ முடியாது என கூறினார்.
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. போதிய வெளிப்படை தன்மையற்ற நிலை மற்றும் சீன விருப்பங்களே நிறைவேற்றப்படுதல் ஆகியவை காணப்படுகிறது.
இதனால் பாகிஸ்தானின் நிலையை குறிப்பிடும் வகையில் பாதுகாப்பு மந்திரியின் பேச்சு அமைந்துள்ளது. தொடர்ந்து சிங் பேசும்பொழுது, நாட்டில் தொழிற்சாலையின் தொடர் செயல்பாட்டிற்கு பாதுகாப்பு வழங்குபவர்களாக நாட்டின் ஆயுத படைகளின் பங்கு அதிகளவில் உள்ளது.
நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதில் தைரியம் நிறைந்த நம்முடைய வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் எல்லைகளை பாதுகாப்பதுடன் நில்லாமல் நாட்டிற்காக தங்களது உயிரையே இழந்துள்ளனர். நம்முடைய தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story