10 வது நாளாக நீடிக்கும் போராட்டம் : நாடு முழுவதும் 8-ந் தேதி வேலை நிறுத்தம் விவசாயிகள் அழைப்பு
வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் நாடு முழுவதும் 8-ந் தேதி வேலை நிறுத்தம் செய்ய விவசாயிகள் அழைப்பு விடுத்து உள்ளனர்.
புதுடெல்லி
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் இன்று 10 வது நாளாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 26-ந் தேதி முதல் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்தில் ஒரு பிரிவினரும், மீதமுள்ளவர்கள் டெல்லி எல்லைகளிலும் திரண்டு போராடுவதால் தலைநகர் முழுவதும் ஸ்தம்பித்து வருகிறது.
திக்ரி, சிங்கு, காஜிப்பூர் போன்ற எல்லைகளை பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஆக்கிரமித்து இருப்பதால் அண்டை மாநிலங்களுடனான தொடர்பை டெல்லி இழந்து வருகிறது. குறிப்பாக அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலைகள் மூடப்பட்டு உள்ளன.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்காகவும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட பாதுகாப்பு அளிப்பதற்காகவும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை உடனடியாக கூட்டுமாறு மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கடந்த 1-ந் தேதி விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மத்திய அரசு சார்பில் பங்கேற்ற வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக இணை மந்திரி சோம் பர்காஷ் ஆகியோர் வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்சினைகளை ஆராய குழு அமைக்க பரிந்துரைத்தனர்.
ஆனால் இதை விவசாயிகள் ஏற்க மறுத்ததால், அன்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
தனால் நேற்று முன்தினம் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் சுமார் 40 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்களுடன் மத்திய அரசு பிரதிநிதிகள் (மத்திய மந்திரிகள்) பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 8 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் கவலைகள் மற்றும் சந்தேகங்களை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய மந்திரிகள் உறுதியளித்தனர். எனினும் சட்டத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி விவசாயிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கியதால் இந்த பேச்சுவார்த்தையும் முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்தது.
எனவே இன்று (சனிக்கிழமை) மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்த நிலையில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். இதில் தங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சனிக்கிழமை (இன்று) நடைபெறும் பேச்சுவார்த்தையில், எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால், எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். குறிப்பாக டிசம்பர் 8-ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுப்பது என இன்றைய கூட்டத்தில் நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்’ என்று தெரிவித்தனர்.
அன்றைய தினம் அனைத்து சாலைகளின் சுங்கச்சாவடிகளையும் நாங்கள் முற்றுகையிடுவோம் என கூறிய விவசாயிகள், வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் டெல்லிக்கு வரும் அனைத்து சாலைகளையும் வருகிற நாட்களில் அடைப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே டெல்லி எல்லைகளில் குழுமியிருக்கும் விவசாயிகளால் தினந்தோறும் சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து முடங்கி வருகிறது. இதனால் போக்குவரத்து அடைக்கப்பட்டுள்ள சாலைகள், மாற்று ஏற்பாடுகள் போன்றவை குறித்து டெல்லி போலீசார் தினமும் தங்கள் டுவிட்டர் தளத்தில் மக்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கி வருகின்றனர்.
இந்த போராட்டத்தால் டெல்லி முழுவதும் குழப்பமும், பரபரப்பும் நிலவி வரும் நிலையில், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவி வருகிறது.
இந்த் நிலையில் போராட்டத்தின் போது விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறக் கோரி ஜன்னாயக் ஜந்தா கட்சி (ஜேஜேபி) தலைவர் திக்விஜய் சவுதலா உள்துறை அமைச்சர் அனில் விஜ்- யை சந்தித்தார்
திக்விஜய் சவுதலா கூறுகையில், "இந்த விவகாரத்தை ஆராய்வோம் மற்றும் பிரச்சினையை முதலமைச்சருடன் விவாதிப்பேன் என்று உள்துறை அமைச்சர் எங்களுக்கு உறுதியளித்துள்ளார்"
Related Tags :
Next Story