மராட்டிய மேம்பாட்டு வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம்


மராட்டிய மேம்பாட்டு வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2020 12:14 PM IST (Updated: 5 Dec 2020 12:14 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் மராட்டிய மேம்பாட்டு வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் வசிக்கும் மராட்டிய மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மராட்டிய மேம்பாட்டு வாரியத்தை அரசு அமைத்துள்ளது. மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைத்ததற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் கர்நாடக மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக மராட்டிய மேம்பாட்டு வாரியத்தை அரசு திரும்ப பெறாத காரணத்தால் இன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டன. அதன்படி இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.  பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கவில்லை. முழு அடைப்பை ஆளும் பா.ஜனதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. முழு அடைப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை விடுத்தார். 

போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், மராட்டிய மேம்பாட்டு ஆணையம் அமைப்பதை எதிர்த்து கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மேக்ரி வட்டத்தில் இருந்து பெங்களூருவில் உள்ள முதல்-மந்திரி இல்லத்தை நோக்கி கன்னட அமைப்புகள் வாகனங்களில் அணிவகுத்துச் சென்றனர்.

கன்னட அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டத்தினால் தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. முழு அடைப்பு போராட்டத்தினால் மைசூர், சாம்ராஜ் நகர், கொள்ளேகால் பகுதிக்கு செல்லும் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டன. 

இரு மாநில எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பகுதிக்கு தலமலை வழியாக தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Next Story