ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: டெல்லியில் 11-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்


Image courtesy : ANI
x
Image courtesy : ANI
தினத்தந்தி 6 Dec 2020 9:58 AM IST (Updated: 6 Dec 2020 9:58 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாமல் நாங்கள் ஒரு அடி கூட பின்வாங்க மாட்டோம் என்ற உறுதியுடன் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்ந்து வருகின்றனர்.

புதுடெல்லி,

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங் களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு உள்ளனர்.

டெல்லியின் புராரி மைதானத்திலும், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளிலும் அரசுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டிருக்கும் அவர்கள் இன்று 11-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்த சட்டங்கள் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு முறையை அழித்து, விவசாய துறையை கார்பரேட்டுகளிடம் தாரைவார்க்கும் என அச்சம் வெளியிட்டு வரும் அவர்கள், இந்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தங்கள் கோரிக்கையை வென்றெடுப்பதற்காக வருகிற 8-ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுத்துள்ள விவசாயிகள், அன்றைய தினம் சாலைகளின் சுங்கச்சாவடியை முற்றுகையிடுவோம் என்றும் அறிவித்து உள்ளனர்.

இவ்வாறு தீவிரமடைந்து வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசும் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகிறது. முக்கியமாக கடந்த 1 மற்றும் 3-ந் தேதிகளில் சுமார் 40 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், வர்த்தகம் மற்றும் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக இணை மந்திரியும், பஞ்சாப் மாநில எம்.பி.யுமான சோம் பர்காஷ் ஆகியோர் அடங்கிய மத்திய அரசு பிரதிநிதிகள் நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் எத்தகைய முடிவும் எட்டப்படவில்லை.

முதலில் இந்த சட்டங்கள் மீதான பிரச்சினைகளை ஆராய குழு அமைக்க மத்திய அரசு பரிந்துரைத்தது. பின்னர் இந்த சட்டங்கள் மீதான விவசாயிகளின் கவலைகளும், சந்தேகங்களும் தீர்க்கப்படும் என உறுதியும் அளித்தது. மேலும் மண்டி அமைப்பு மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை போன்றவை தொடர்ந்து இருக்கும் எனவும் மத்திய அரசின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

ஆனால் இதை ஏற்காத விவசாயிகள், 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்தது.

இந்த சூழலில் மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயான 5-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய மந்திரிகள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல், சோம் பர்காஷ் ஆகியோர் சுமார் 40 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் முதலில் முந்தைய பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட அம்சங்கள் குறித்து வேளாண் செயலாளர் சஞ்சய் அகர்வால் சுருக்கமாக எடுத்துரைத்தார். பின்னர் பேசிய தோமர், ‘விவசாயிகள் பிரச்சினையை சுமுக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. விவசாயிகளின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம், வேளாண் சட்டங்கள் குறித்த உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்’ என தெரிவித்தார்.

பின்னர் மந்திரி சோம்பர்காஷ், விவசாயிகளிடம் பஞ்சாபி மொழியில் பேசினார். அவரும் விவசாயிகளின் அனைத்து கவலைகளையும் போக்க திறந்த மனதுடன் இருக்கிறோம் என கூறினார்.

ஆனால் விவசாயிகள் இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் மவுன விரதம் கடைப்பிடித்தனர். அந்த வகையில் சில பிரதிநிதிகள் தங்கள் உதடுகளில் விரலை வைத்திருந்தனர்.

மேலும் 3 சட்டங்களும் திரும்ப பெறப்படுமா? இல்லையா? என்ற கேள்விக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என அரசு பதிலளிக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தினர். இதை குறிக்கும் வகையில் ‘ஆம் அல்லது இல்லை’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட காகிதத்தையும் ஏந்தியிருந்தனர்.

விவசாயிகளின் இந்த துல்லியமான இந்த கேள்விக்கு மத்திய மந்திரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை. அதே நேரம் விவசாயிகளின் மவுனத்தை கலைத்து அவர்களை பேச வைக்க முயன்றனர். ஆனால் விவசாயிகள் தங்கள் மவுனத்தை கலைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து எந்த வித முடிவும் எட்டப்படாமல் நேற்றைய பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது. எனினும் மீண்டும் 9-ந் தேதி சந்தித்து 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாமல் நாங்கள் ஒரு அடி கூட பின்வாங்க மாட்டோம் என்ற உறுதியுடன் விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முகாம்மிட்டு போராட்டத்தைத் தொடார்ந்து நடத்தி வருகின்றனா். பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விவசாயிகள் திக்ரியில் டெல்லி-அரியானா எல்லையில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.

9-ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும், 8 ஆம் தேதி அழைப்புவிடுத்தபடி, நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story