8-ம் தேதி விவசாயிகள் நடத்தும் நாடு தழுவிய போராட்டத்திற்கு சந்திரசேகர் ராவ் ஆதரவு


Image courtesy : ANI
x
Image courtesy : ANI
தினத்தந்தி 6 Dec 2020 2:29 PM IST (Updated: 6 Dec 2020 2:29 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களைத் எதிர்த்து வரும் 8-ம் தேதி விவசாயிகள் அழைப்பு விடுத்த நாடு தழுவிய போராட்டத்திற்கு தெலுங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் ஆதரவு அளித்துள்ளார்.

ஐதராபாத்,

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் போர்க்கொடி தூக்கி, டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

11-வது நாளாக தொடரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சு முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி வரும் 8-ம் தேதி விவசாயிகள் பாரத் பந்த் அதாவது நாடுமுழுவதும் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

'வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்கு எதிரானது எனக் கூறி நாடாளுமன்றத்திலேயே டிஆர்எஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவது அவசியம்.ஆதலால் டிஆர்எஸ் கட்சியினர் அனைவரும் விவசாயிகள் போராட்டத்தை வெற்றி பெற வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story