விவசாயிகள் போராட்டம்; டெல்லி எல்லையில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆய்வு
விவசாயிகள் போராட்டம் 12வது நாளாக நீடிக்கும் நிலையில், டெல்லி எல்லையில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆய்வு செய்ய உள்ளார்.
புதுடெல்லி,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புராரி மைதானத்திலும், டெல்லியின் எல்லைப்பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் எல்லை நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. விவசாயிகளை சமாதானப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. 5 சுற்றுகள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. 6ம் சுற்று பேச்சுவார்த்தை நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக இன்றும் நீடிக்கிறது. போராட்டம் நடைபெறும் இடங்களிலேயே கூடாரம் அமைத்து தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு மாநில அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆய்வு செய்ய உள்ளார். அவருடன் மாநில மந்திரிகளும் சென்று ஆய்வு செய்கின்றனர். விவசாயிகளை சந்தித்தும் பேசுகின்றனர்.
விவசாயிகளின் போராட்டம் காரணமாக சிங்கு, ஆச்சண்டி, பியாவோ மணியாரி, மங்கேஷ் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை-44 இருபுறமும் மூடப்பட்டுள்ளது. முகர்பா மற்றும் ஜி.டி.கே. சாலையில் இருந்து போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story