நாட்டு மக்கள் அனைவரும் பாரத் பந்தில் பங்கேற்க வேண்டும்: சிவசேனா
விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டு மக்கள் அனைவரும் பாரத் பந்தில் பங்கேற்க வேண்டும் என்று சிவசேனா அழைப்பு விடுத்துள்ளது.
மும்பை,
வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இது விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு உள்ளிட்டவை அழிந்து, வேளாண்துறை தனியார்வசம் சிக்கிவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். எனவே இந்த சட்டங்களை திரும்ப பெற அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு உள்ளனர். புராரி மைதானம் மற்றும் திக்ரி, சிங்கு, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் கடந்த 26-ந் தேதி முதல் விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டங்களால் டெல்லி முடங்கி வருகிறது. இதற்கு மத்தியில், வரும் 8 ஆம் தேதி விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் பாரத் பந்தில் பங்கேற்க வேண்டும் என சிவசேனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"நாட்டு மக்கள் அனைவரும் விருப்பத்துடன் பாரத் பந்தில் பங்கேற்க வேண்டும். அதுதான் விவசாயிகளுக்கு நமது உண்மையான ஆதரவைத் தெரிவிப்பதாக இருக்கும். இது ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியின் கோரிக்கைகளை எழுப்புவதற்கான பந்த் அல்ல, மாறாக புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்பபு தெரிவிக்கும் நம் நாட்டு விவசாயிகளின் குரலை வலுப்படுத்துவதற்கான ஒரு பந்த் ஆகும். எனவே, விவசாயிகளை ஆதரிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்” என்றார்.
Related Tags :
Next Story