விவசாயிகளை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது - ம.பி. முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான்


விவசாயிகளை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது - ம.பி. முதல்மந்திரி  சிவராஜ் சிங் சவுகான்
x
தினத்தந்தி 7 Dec 2020 3:39 PM GMT (Updated: 7 Dec 2020 3:39 PM GMT)

விவசாயிகளை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது என்று மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத், 

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் 12-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.  மேலும், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் நாளை நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. 

விவசாயிகள் நடத்தும் நாடு தளவிய அளவிலான இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பல்வேறு தொழில் அமைப்புகளும், சங்கங்களும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சென்றுள்ள மத்திய பிரதேச முதல்மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

வேளாண் சட்டங்கள் குறித்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, அகில் தல், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகளின் சூழ்ச்சியை இன்று உங்களிடம் வெளிப்படுத்துகிறேன்.  காங்கிரஸ் மூழ்கிக்கொண்டிருக்கும் படகாக உள்ளது. ஆகையால் தான் அவர்களை காப்பாற்றிக்கொள்ள விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றனர்.

விவசாயிகள், நுகர்வோர்கள், வேளாண் வர்த்தக நலனுக்காக போட்டி சந்தையை உருவாக்க வேண்டும் இதற்காக வேளாண் உற்பத்தி சந்தை கமிட்டி சட்டத்தை அமல்படுத்தி அதன்மூலம் தனியார் நிறுவனங்கள் வேளாண் துறையில் முதலீடு, உட்கட்டமைப்பு, சந்தைமுறையை ஊக்கப்படுத்தும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் எனக்கு 2011 ஆம் ஆண்டு கடிதம் எழுதினார். அந்த கடிதம் தன்னிடம் உள்ளது.

 விவசாயிகளுக்கு உறுதுணையாக அரசு உள்ளது. விவசாயிகளின் சந்தேகங்களையும் பிரச்சினைகளையும் அரசு தீர்க்கும். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார். 

Next Story