இந்தியாவில் ஜியோ 5 ஜி சேவை அறிமுகம் எப்போது? முகேஷ் அம்பானி பேச்சு


இந்தியாவில் ஜியோ 5 ஜி சேவை அறிமுகம் எப்போது? முகேஷ் அம்பானி பேச்சு
x
தினத்தந்தி 8 Dec 2020 12:38 PM GMT (Updated: 8 Dec 2020 12:38 PM GMT)

இந்தியாவில் அடுத்த ஆண்டு 2-வது பாதியில் ஜியோ 5 ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவன தலைவரும் மேலாண்மை இயக்குனருமான முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

மும்பை,

இந்தியாவில் அடுத்த ஆண்டு 2-வது பாதியில் ஜியோ 5 ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவன தலைவரும் மேலாண்மை இயக்குனருமான முகேஷ் அம்பானி தெரிவித்தார்.  இந்தியா மொபைல் காங்கிரஸ் -2020 கருத்தரங்கில் பங்கேற்று காணொலி வயிலாக உரையாற்றிய முகேஷ் அம்பானி இந்தத் தகவலை தெரிவித்தார்.  

இந்தியாவில் 5 ஜி சேவை அறிமுகப்படுத்துவதோடு, மலிவு விலையில் ஆண்ட்ராய்டு செல்போனையும் கூகுள் உதவியுடன் மேம்படுத்தி வருவதாகவும் வரும் மாதங்களில்  சந்தையில்  ரூ.4 ஆயிரம் என்ற விலைக்கே  செல்போன்கள் கிடைக்கும் எனவும் முகேஷ் அம்பானி கூறினார். முகேஷ் அம்பானி மேலும் கூறுகையில், 
இந்தியாவின் 5 ஜி சேவை புரட்சியில்  ஜியோ வழிகாட்டியாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.  

இந்தியாவில் 4ஜி அதிவேக இண்டர்நெட் சேவை அறிமுகம் செய்யப்பட்டு டிஜிட்டல் கட்டமைப்பு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 2020 முழுவதும் வேலை, கல்வி, ஷாப்பிங், மருத்துவச் சேவை, மக்களுடன் கலந்துரையாடல், விளையாட்டு என அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே மக்கள் செய்து வருகின்றனர். இதன் மூலம் டிஜிட்டல் சேவைக்கு வாடிக்கையாளர்களுக்கும் இந்தியாவில் மிகப்பெரிய சந்தை உருவாகியுள்ளது.

கொரோனா காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதிலிருந்து இந்தியா மீண்டு வருவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சியை அடையும். இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா விரைவில் எட்டும். இந்திய வரலாற்றில் அடுத்த 10 ஆண்டு மிகவும் முக்கியமானதாக இருக்கப்போகிறது. 

10 ஆண்டுகளில் இந்திய எட்டும் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. இன்னமும் 2 ஜி நெட்வொர்க் மட்டுமே பயன்படுத்தி வரும் சமூகத்தில் பின் தங்கிய மக்களுக்கும் மலிவு விலையில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்க ஏதுவாக அரசு கொள்கை முடிவுகளை வகுக்க வேண்டும்” என்றார். 

Next Story