மேற்கு வங்காளத்தில் தொண்டர் உயிரிழப்பு; மெழுகுவர்த்தி ஏந்தி பா.ஜ.க. பேரணி
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் கொல்கத்தா நகரில் மெழுகுவர்த்தி ஏந்தி இன்று பேரணியாக சென்றனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே பல மோதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
மேற்கு வங்காளத்தில் சிலிகுரியில் பா.ஜ.க. சார்பில் மாநில தலைமை செயலகம் நோக்கி பேரணி ஒன்று நடத்தப்பட்டது. அவர்களை தடுத்து நிறுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தண்ணீர் பீய்ச்சியும் கூட்டத்தில் உள்ளவர்களை கலைந்து போக செய்தனர்.
இந்த பேரணியில், போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே நடந்த மோதலில் உலென் ராய் என்ற கட்சி தொண்டர் உயிரிழந்து விட்டார் என அக்கட்சி குற்றச்சாட்டு கூறியது. தொண்டர் கொல்லப்பட்டதற்கு மம்தாவின் திரிணாமுல் காங்சிரசாரே காரணம் என கூறியதுடன், போலீசாரை சீருடையில் இருந்த திரிணாமுல் காங்சிரசார் என்றும் கூறியது.
இதுபற்றி மேற்கு வங்காள ஆளுநரை பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து அறிக்கை ஒன்றையும் நேற்று அளித்தனர்.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் சிலிகுரி நகரில் பா.ஜ.க. தொண்டர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் கொல்கத்தா நகரில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியாக நடந்து சென்று இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story