சிறையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டது: ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் மனு
கேரள தங்க கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷ் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.
கொச்சி,
கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் கடந்த ஜூலை மாதம் 5ந்தேதி தூதரகத்திற்கு வந்த பார்சலை சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் அன்றைய மதிப்பில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் கேரள தங்க கடத்தல் வழக்கு பரபரப்படைந்தது.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், வழக்குடன் தொடர்புடைய தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் 10 பேருக்கு கடந்த அக்டோபரில் ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது. 3 பேரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
இந்த வழக்கை அமலாக்க துறை மற்றும் சுங்க துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். ஸ்வப்னாவுடன் கூட்டாளியாக செயல்பட்ட கும்பல், திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் முதல் நடப்பு 2020ம் ஆண்டு ஜூன் வரை சுமார் 19 முறை தங்கத்தை கடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் நவம்பர் மாதத்தில் நான்கு முறை, டிசம்பரில் 12 முறை, ஜனவரி, மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் தலா ஒரு முறை சட்டவிரோதமாக தங்கம் கடத்தி உள்ளனர். ஸ்வப்னாவும், அவரது கும்பலும் டிசம்பரில் மட்டும் 36 கிலோ தங்கத்தை கடத்தி உள்ளனர்.
இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர் என்பவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கேரள தங்க கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷ் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.
கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், சிறைச்சாலையில் தனக்கு மிரட்டல்கள் விடப்பட்டன. அதனால், தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
அதிக செல்வாக்குள்ள நபர்களால் சிறை வளாகத்திற்குள் எனது உயிருக்கு பாதிப்பு ஏற்பட கூடும். முக்கிய அரசியல்வாதிகளின் பெயர்களை கூற கூடாது என அதிகாரிகள் என்னிடம் சிறையில் தெரிவித்தனர். விசாரணை அமைப்புகளுடன் ஒத்துழைக்க கூடாது என்றும் என்னிடம் கூறினர்.
அப்படி இல்லையென்றால் என்னுடைய குடும்பத்திற்கு தீங்கு நேரிடும் என்றும் மிரட்டல் விடப்பட்டது என தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story