கொரோனா நோயாளிகள் வீட்டில் உரிய உத்தரவு இல்லாமல் நோட்டீஸ் ஒட்டத் தேவையில்லை - உச்சநீதிமன்றம் உத்தரவு
கொரோனா நோயாளிகள் வீட்டில் உரிய உத்தரவு இல்லாமல் நோட்டீஸ் ஒட்டத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியை சேர்ந்த குஷ் கல்ரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கொரோனா தொற்றால் பாதிப்படையும் நபர்களின் குடியிருப்பு விவரம், அவர்களின் பெயர் உள்ளிட்ட தனி நபர் விவரங்கள் அடங்கிய நோட்டீஸ் ஒட்டப்படுவது சம்பந்தப்பட்ட நபருக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார்.
எனவே ஒருவரின் அடிப்படை உரிமையை பாதிக்கும் வகையில், இது போன்று சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு ஏதுவாக மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பிறப்பித்துள்ள ஆணைகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் தனி நபர் விவரங்கள் அடங்கிய சுவரொட்டி ஒட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற சுவரெட்டிகளை ஒட்டுவதால் பாதிப்பு ஏற்பட்டால், அது தவிர்க்கப்பட வேண்டும். கொரோனா பாதிப்பு உள்ள வீடுகளில் கவனக்குறைவாக நுழைவதை தடுக்க சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்த நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு அளித்த பதில் மனுவை பரிசீலித்த நீதிபதிகள், கொரோனா நோயாளிகள் வீட்டில் உரிய உத்தரவு இல்லாமல் நோட்டீஸ் ஒட்டத் தேவையில்லை என்று உத்தரவிட்டனர்.
பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் இதற்கான உத்தரவை பிறப்பிக்காத வரையில், கொரோனா நோயாளிகள் வீட்டில் நோட்டீஸ் ஒட்ட வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story