ஜே.பி.நட்டா கார் மீதான தாக்குதல்: பா.ஜனதாவே திட்டமிட்டு நடத்தியதா? - மேற்கு வங்காள மந்திரி சந்தேகம்


ஜே.பி.நட்டா கார் மீதான தாக்குதல்: பா.ஜனதாவே திட்டமிட்டு நடத்தியதா? - மேற்கு வங்காள மந்திரி சந்தேகம்
x
தினத்தந்தி 11 Dec 2020 3:11 AM IST (Updated: 11 Dec 2020 3:11 AM IST)
t-max-icont-min-icon

ஜே.பி.நட்டா கார் மீதான தாக்குதல் சம்பவத்தை பா.ஜனதாவே திட்டமிட்டு நடத்தியதா என்று மேற்கு வங்காள மந்திரி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா, 

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கார் அணிவகுப்பு மீதான தாக்குதல் குறித்து மேற்கு வங்காள பஞ்சாயத்து மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான சுப்ரதா முகர்ஜி பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

மேற்கு வங்காள அரசின் வரலாற்று சிறப்புமிக்க சாதனை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாக இந்த நிகழ்வை பா.ஜனதா நடத்தி இருக்குமோ என்று அறிய விரும்புகிறோம்.

இது பா.ஜனதாவால் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்று கண்டறிவது அவசியம்.

தான் தாக்கப்பட்டதாக ஜே.பி.நட்டா கூறுகிறார். ஆனால், அவரும், அவருடைய கட்சியினரும் மோதலை தூண்டி வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அவர்கள் ஆத்திரமூட்டினாலும், அவர்களின் வலையில் சிக்காதீர்கள் என்று திரிணாமுல் காங்கிரசாரை கேட்டுக்கொள்கிறோம். பா.ஜனதாவினரிடம் இருந்து தொலைவிலேயே இருங்கள் என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, ஜே.பி.நட்டா கார் அணிவகுப்புக்கு பின்னால் தொலைவில் வந்த வாகனங்கள் மீதுதான் சாலை ஓரத்தில் நின்ற சிலர் கல் வீசியதாக மேற்கு வங்காள போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.


Next Story