அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள்
அதிநவீன வசதிகளுடன் ரூ.971 கோடியில் பிரமாண்டமாக உருவாக உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
* புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் கட்டுகிறது.
* தற்போதைய நாடாளுமன்றத்தில் மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் அமருகிற வகையில் இருக்கை வசதிகள் உள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டிடம், எதிர்காலத்தில் இரு அவைகளையும் விரிவாக்கம் செய்ய வசதியாக மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரத்தக்க வகையில் கட்டப்படுகிறது. புதிய கட்டிடத்தில், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் 1,224 உறுப்பினர்கள் பங்கேற்க முடியும்.
* தரைத்தளம், அதன்கீழே ஒரு அடித்தளம், முதல் தளம், இரண்டாவது தளம் என மொத்தம் 4 தளங்களை கொண்டிருக்கும்.
* நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்திய ஜனநாயகத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டுகிற வகையில் பெரிய அரங்கம் ஒன்று அரசியல் சாசன அரங்கம் என்ற பெயரில் அமையும். நூலகம், கட்சி அலுவலகங்கள், பல்வேறு நிலைக்குழு அலுவலகங்கள், உணவு உண்ணும் அரங்குகள், வாகன நிறுத்துமிடங்கள் என வசதிகளுக்கு பஞ்சம் இருக்காது.
* நிலநடுக்கத்தால் பாதிக் காத அளவுக்கு வலிமையுடன் தொழில் நுட்பங்களுடன் புதிய கட்டிடம் அமையும்.
* 2022-ம் ஆண்டு, இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு கொண்டாட்ட அமர்வினை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்துவதற்கு மத்திய அரசு விரும்புகிறது.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம், இந்திய கலாசாரத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும்.
இதன் கட்டுமானப்பணியில் 2 ஆயிரம் பேர் நேரடியாக ஈடுபடுவார்கள். 9 ஆயிரம் பேர் மறைமுகமாக ஈடுபடுவார்கள். சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததும் கட்டுமான பணிகள் சூடுபிடிக்கும்.
முன்னதாக, நவீன வசதிகளுடனும், தொழில்நுட்பங்களுடனும் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அருகிலேயே நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு முடிவு எடுத்தது. இந்த புதிய கட்டிடம், 64 ஆயிரத்து 500 சதுரமீட்டர் பரப்பில் ரூ.971 கோடி செலவில் அதிநவீன வசதியுடன் அமைகிறது. இந்த புதிய கட்டிடத்துக் கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று மதியம் நடந்தது.
கர்நாடக மாநிலம், சிருங்கேரி மடத்தை சேர்ந்த வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு மந்திரங்களை முழங்க பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து அங்கு சர்வமத பிரார்த்தனைகள் நடைபெற்றன.
இந்த விழாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோரும் கலந்து கொண்டு பிரார்த்தனையில் பங்கேற்றனர். மத்திய மந்திரிகள், பல்வேறு கட்சித்தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள் என பல தரப்பினரும் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தாலும், நாடாளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு அனுமதி தரப்பட்டது நினைவுகூரத்தக்கது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டிய பேசிய பிரதமர் மோடி, “ இது ஒரு வரலாற்றுச்சிறப்பு மிக்க நாள். இன்று நமது ஜனநாயக வரலாற்றில் ஒரு மைல் கல். இந்திய மக்களான நாம் ஒன்றிணைந்து நமது நாடாளுமன்றத்தின் இந்த புதிய கட்டிடத்தை கட்டி எழுப்புவோம். இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டை கொண்டாடுகிறபோது, இந்த புதிய கட்டிடம் ஒரு உத்வேகமாக இருக்கும்.
2014-ம் ஆண்டு நான் எம்.பி.யாக நாடாளுமன்ற வளாகத்துக்கு முதல்முறையாக வரும் வாய்ப்பு கிடைத்த தருணத்தை நினைத்துப்பார்க்கிறேன். அது என் வாழ்க்கையில் ஒரு போதும் மறக்க முடியாத தருணம் ஆகும். ஜனநாயகத்தின் ஆலயமான நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கு முன் நான் மண்டியிட்டு வணங்கினேன்.
தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம், சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் இந்தியாவுக்கு முக்கிய பங்களிப்பை செய்துள்ளது. இங்குதான் சுதந்திர இந்தியாவின் முதல் அரசு உருவாக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் முதல் அமர்வும் இங்கேதான் நடந்தது. நமது அரசியல் சாசனம் இங்குதான் தயாரிக்கப்பட்டது. நமது ஜனநாயகம் இங்கு மீண்டும் உருவாக்கப்பட்டது. பாபாசாகேப் அம்பேத்கரும் மற்றவர்களும் மைய மண்டபத்தில் அமர்ந்து, தீவிர விவாதங்களுக்கு பிறகு நமக்கு அரசியல் சாசனத்தை தயாரித்து கொடுத்தார்கள்.
இந்த கட்டிடத்திற்குள் இயற்றப்பட்ட சட்டங்களும், நடந்த விவாதங்களும் நமது நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தின் ஒரு பகுதி ஆகும். ஆனால் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டு, இப்போது கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஆகி விட்டது. இது அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வது முக்கியமானது. இப்போது இந்த கட்டிடத்துக்கு ஓய்வு தேவைப்படுகிறது.
பழைய நாடாளுமன்ற கட்டிடம், சுதந்திரத்துக்கு பிந்தைய இந்தியாவுக்கு வழிகாட்டியது என்றால் புதிய கட்டிடம் ஒரு சுயசார்பு இந்தியாவை உருவாக்க சாட்சியாக மாறும். பழைய கட்டிடத்தில் நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 21-ம் நூற்றாண்டு இந்தியாவின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
நமது ஜனநாயகம் தோல்வி அடையும் என்று கணிப்புகள் இருந்தன. ஆனால் இன்று அந்த கணிப்புகள் எல்லாம் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 21-ம் நூற்றாண்டின் உலகமும் இந்தியா ஒரு முக்கியமான ஜனநாயக சக்தியாக முன்னேறி வருவதை இந்தியர்கள் பெருமையுடன் கூறலாம்.
இந்தியாவின் ஜனநாயகம் என்பது பல நூற்றாண்டுகளின் அனுபவத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும்.
ஜனநாயகம் வேறு இடங்களில் விவாதிக்கப்படும்போது, அது தேர்தல் நடைமுறைகள், ஆட்சி மற்றும் நிர்வாகம் பற்றியதாகும். ஆனால் இந்தியாவில ஜனநாயகம் என்பது ஒரு மதிப்பு மற்றும் வாழ்க்கை முறை ஆகும்.
இந்தியாவில் ஜனநாயகம் எப்போதுமே ஆட்சியுடன் வேறுபாடுகளை தீர்ப்பதற் கான வழி ஆகும். வெவ்வேறு பார்வைகள், மாறுபட்ட கண்ணேட்டங்கள் உண்டு. அவை ஒரு துடிப்பான ஜனநாயகத்தை மேம்படுத்துகின்றன.
இந்த செயல்முறையில் இருந்து துண்டிக்கப்படாதவரையில், வேறுபாடுகளுக்கு இடம் உண்டு என்ற குறிக்கோளுடன் நமது ஜனநாயகம் முன்னேறி உள்ளது.
கொள்கைகளும், அரசியலும் மாறலாம். ஆனால் அனைத்தும் மக்கள் சேவைக் காக இருக்க வேண்டும். இந்த இறுதி இலக்கில் வேறுபாடுகள் இருக்கக்கூடாது.
நாடாளுமன்றத்துக்குள்ளும் சரி, வெளியேயும் சரி விவாதங்கள் நடக்கிறபோது தேசிய சேவையை நோக்கிய உறுதியும், தேசிய நலனுக்கான அர்ப்பணிப்பும் அவற்றில் தொடர்ந்து பிரதிபலிக்க வேண்டும்.
நாடாளுமன்றத்துக்குள் நுழையும் ஒவ்வொரு உறுப்பினரும், பொதுமக்களுக்கும், அரசியலமைப்புக்கும் பொறுப்பு கூற வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த ஜனநாயக ஆலயத்தை புனிதப்படுத்த இதுபோன்ற சடங்குகள் எதுவும் இல்லை. இந்த ஆலயத்துக்கு வருகிற மக்கள் பிரதிநிதிகள்தான் அதைப் புனிதப்படுத்த வேண்டும்.
நாட்டு நலனைவிட பெரிதான நலன் என்று ஒன்று கிடையாது என்பதை அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களின் சொந்த அக்கறையை விட, நாட்டின் மீதான அக்கறைதான் அதிகமாக இருக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை விட அவர்களுக்கு வேறு எதுவும் முக்கியம் கிடையாது. அரசியலமைப்பின் கண்ணியமும், நிறைவேற்றமும் அவர்களது வாழ்க்கையின் மிகப்பெரிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பல புதிய விஷயங்கள் செய்யப்படுகின்றன. இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்திறனை அதிகரிக்கும். மேலும் நவீன முறைகள், பணி கலாசாரத்தில் இணைக்கப்படும்” என்று அவர் கூறினார்.
இந்த விழாவில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா பேசும்போது, “உலகின் மிகப்பெரிய செயல்பாட்டு மற்றும் துடிப்பான ஜனநாயகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படவேண்டும் என்பது இரு அவைகளின் உறுப்பினர்களின் விருப்பம் ஆகும். ஜனநாயகத்தின் அளவு பெரிதாகி வருவதால் புதிய நாடாளுமன்ற கட்டிடம் தேவை. நாடு ஜனநாயகத்தின் நீண்ட பயணத்தை மேற்கொண்டது. இப்போது நாட்டிலும், உலகிலும் புதிய மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே புதிய கட்டிடத்தின் தேவை உணரப்பட்டு வருகிறது” என குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “ புதிய நாடாளுமன்ற கட்டிடம் நாட்டின் அனைத்து மாநிலங்களின் கலாசாரத்தையும், பன்முகத்தன்மையையும் சித்தரிக்கும் நேர்த்தியான கலைகளால் நிரம்பி இருக்கும். இது நாட்டின் அனைத்து மக்களுக்கும் உத்வேகம் அளிக்கும் மையமாகவும் இருக்கும். இது இந்திய கலாசாரத்தின் பன்முகத்தன்மையை உள்ளடக்கியும் இருக்கும்” என கூறியது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பெருமைக்கு சான்றாக அமைந்தது.
Related Tags :
Next Story