எல்லையில் இயல்பு நிலையை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் - சீனாவுக்கு, இந்தியா அறிவுறுத்தல்


எல்லையில் இயல்பு நிலையை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் - சீனாவுக்கு, இந்தியா அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 11 Dec 2020 12:27 AM GMT (Updated: 11 Dec 2020 12:27 AM GMT)

லடாக் மோதல் விவகாரம் தொடர்பாக, எல்லையில் இயல்பு நிலையை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு சீனாவுக்கு, இந்தியா அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி, 

லடாக் எல்லையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தை தடுத்து நிறுத்தியதால் இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட மோதல் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோதலால் எல்லையில் ஏற்பட்ட பதற்றம் இன்றும் நீடித்து வருகிறது. அங்கு அமைதியை ஏற்படுத்த இருதரப்பும் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் ஆசியான் அமைப்பின் ராணுவ மந்திரிகளின் கூட்டம் ஒன்று மெய்நிகர் முறையில் நேற்று நடந்தது. 10 தெற்காசிய நாடுகள் மற்றும் இந்தியா-சீனா உள்ளிட்ட 8 நாடுகள் இணைந்த இந்த அமைப்பின் கூட்டத்தில், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.

அப்போது ஆக்கிரமிப்பு மனநிலையில் இருக்கும் சீனாவுக்கு, எல்லையில் அத்துமீறலை நிறுத்துமாறு மறைமுகமாக தெரிவித்தார். அவர் தனது உரையில் கூறியதாவது:-

எல்லை விவகாரத்தில் நாங்கள் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவது போல, எல்லை மேலாண்மையில் தன்னடக்கத்தை கடைப்பிடிப்பது மற்றும் அங்கு இயல்பு நிலையை மேலும் சிக்கலாக்கும் செயல்களை தவிர்ப்பது போன்றவையே இந்த பிராந்தியத்துக்கு நிலையான அமைதியை கொண்டு வருவதில் பெரும் பங்காற்றும்.

விதிகள் அடிப்படையிலான ஒழுங்கு, கடல்சார் பாதுகாப்பு சைபர் தொடர்பான குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றுக்கான அச்சுறுத்தல்கள் போன்றவை ஒரு மன்றமாக நாம் கவனிக்க வேண்டிய சவால்களாகவே இருக் கின்றன.

இந்தோ-பசிபிக் கண்ணோட்டம், ஒரு மூலோபாய நம்பிக்கையை வளர்ப்பதற்கான தூண்டுதலை கோடிட்டுக்காட்டுகிறது. மேலும் பிராந்திய கட்டமைப்பில் ஆசியான் மையத்தை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் (வாசுதேவ குடும்பம்), ‘அனைவருக்கும் அமைதி’ ஆகியவையே இந்திய நாகரிகத்தின் அடிப்படையாகும்.

பிராந்திய பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்குதாரர்களாக இருக்கும் 18 முக்கிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகங்களை உள்ளடக்கியுள்ளதால், நமது அமைப்பு நமது பலத்தின் மற்றொரு தூணாகும்.

தற்போது எழுந்துள்ள புதிய சவால்களில் முக்கியமாக, கொரோனா தொற்று நம்மை பல தடைகளை கடக்க விட்டுவிட்டது. துரதிர்ஷ்டவசமாக அந்த தொற்று நோயின் விளைவுகள் இன்னும் நீடிக்கிறது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

Next Story