அடுத்த கல்வி ஆண்டில் ஜே.இ.இ. தேர்வு 4 முறை நடத்தப்படும் - மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு


அடுத்த கல்வி ஆண்டில் ஜே.இ.இ. தேர்வு 4 முறை நடத்தப்படும் - மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Dec 2020 9:01 AM IST (Updated: 11 Dec 2020 9:01 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த கல்வி ஆண்டில் சேருவதற்கான ஜே.இ.இ. தேர்வை 4 முறை எழுத வசதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அடுத்து வர இருக்கும் போட்டித்தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் குறித்து மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் காணொலியில் கலந்துரையாடினார். அப்போது, ‘தேசிய கல்விக்கொள்கை 2020-ன் தூதர்கள் மாணவர்கள் தான்’ என்று குறிப்பிட்ட அவர், கல்விக்கொள்கையை செயல்படுத்துவதில் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஜே.இ.இ. தேர்வு பற்றி மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது, தேர்வுக்கு கடந்த ஆண்டின் பாடத்திட்டமே தொடரும் என்று தெரிவித்ததுடன், இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாடங்களில் தலா 30 கேள்விகள் என்ற நிலையை தலா 25 கேள்விகள் என்று மாற்றுவதற்கு பரிசீலனை நடந்து வருவதாக கூறினார்.

மேலும் மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் வகையில், அடுத்த கல்வியாண் டில் சேர்வதற்கான ஜே.இ.இ. தேர்வு பிப்ரவரி மாதத்தில் தொடங்கி, தொடர்ந்து மாதத்துக்கு ஒரு முறை என 4 முறை நடத்தப்படும், மாணவர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப எத்தனை முறையும் தேர்வு எழுதலாம் என்று மந்திரி கூறினார். எந்த தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அந்த மதிப்பெண்ணே தரவரிசைப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ரமேஷ் பொக்ரியால், ‘மத்திய சுகாதார அமைச்சகத்துடனும், தேசிய மருத்துவ ஆணையத்துடனும் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்று பதில் அளித்தார். இதைப்போல ‘10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியே முடிவு செய்யப்படும்’ என்றும் கூறினார்.

மேலும் ‘செய்முறை தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்’ என்றும் உறுதி அளித்தார். சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நீக்கப்பட்ட பகுதிகள் குறித்து பள்ளிகளுக்கு சந்தேகம் இருந்தால் இணையதளத்தில் பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

Next Story