கொரோனா பரிசோதனை; டெல்லி சிங்கு எல்லையில் மொபைல் வேன் அறிமுகம்


கொரோனா பரிசோதனை; டெல்லி சிங்கு எல்லையில் மொபைல் வேன் அறிமுகம்
x
தினத்தந்தி 11 Dec 2020 5:13 PM IST (Updated: 11 Dec 2020 5:13 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் கொரோனா தொற்றை தவிர்க்க சுகாதார பணியாளர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்.

புதுடெல்லி,

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளில் ஒரு தரப்பு மக்கள் டெல்லி நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த நவம்பர் 26ந்தேதி தொடங்கிய இந்த போராட்டம் முடிவுக்கு வராமலேயே உள்ளது.

அரசு பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமுக தீர்வு காணப்படவில்லை.  இந்நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என மத்திய வேளாண் மந்திரி தோமர் கூறினார்.  கொரோனா பாதிப்பு ஒரு புறம் இருக்க, விவசாயிகள் போராட்டத்தினால், பொது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

டெல்லியில் கடும் குளிரில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வோர், வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி செல்வோர், சொந்த மாநிலம் திரும்புவோர் உள்ளிட்ட பயணிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு பிரிவினரும் போராட்டத்தினால் மறைமுக பாதிப்பு அடைந்து உள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் சிங்கு எல்லை பகுதியில் (டெல்லி-அரியானா எல்லை) போராடி வரும் விவசாயிகள் இடையே கொரோனா தொற்று ஏற்பட்டு விடாமல் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இதன்படி, மொபைல் வேன் ஒன்று செயல்படுத்தப்பட்டு உள்ளது.  இந்த வேனில் உள்ள சுகாதார பணியாளர்கள், எல்லை பகுதியில் இருப்பவர்களிடம் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்.  இதேபோன்று மாநில எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினருக்கும் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

இதுபற்றி பணியாளர் ஒருவர் கூறும்பொழுது, எங்களுக்கு நாளொன்றுக்கு 200 பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது இலக்கு.  நாங்கள் இதுவரை 23 மாதிரிகளை சோதனை செய்துள்ளோம்.  அனைவருக்கும் தொற்று இல்லை என முடிவு தெரிவிக்கின்றது.  நாங்கள் ஆன்டிஜென் சோதனை மற்றும் ஆர்.டி.-பி.சி.ஆர். என இரண்டு வகையான பரிசோதனைகளையும் மேற்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

Next Story