டெல்லி: விவசாயிகள் கால்களுக்கு மசாஜ் செய்யும் உபகரணங்கள்
டெல்லியில் விவசாயிகள் கால்களுக்கு மசாஜ் செய்து விட உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
வேளாண் மக்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் வாங்கியாக வேண்டும் என வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளில் ஒரு பிரிவினர் டெல்லி நோக்கிய பேரணியை தொடங்கினர்.
கடந்த நவம்பர் 26ந்தேதி தொடங்கிய இந்த பேரணியில் முடிவு காணப்படாமலேயே உள்ளது. விவசாயிகளுடன், அரசு பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என மத்திய வேளாண் மந்திரி தோமர் கூறினார்.
இதுஒரு புறம் இருக்க, விவசாயிகளின் நீடித்த போராட்டத்தினால், பொது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
டெல்லியில் கடும் குளிரில் அத்தியாவசிய பணிகளுக்காக செல்வோர், வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு செல்வோர், சொந்த மாநிலம் திரும்புவோர் உள்ளிட்ட பயணிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு பிரிவினரும் இதனால் மறைமுக பாதிப்பு அடைந்து உள்ளனர்.
டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையில், தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், டெல்லியில் சிங்கு எல்லை பகுதியில் (டெல்லி-அரியானா எல்லை) போராடி வரும் விவசாயிகள் இடையே கொரோனா தொற்று ஏற்பட்டு விடாமல் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இதன்படி, மொபைல் வேன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வேனில் உள்ள சுகாதார பணியாளர்கள், எல்லை பகுதியில் உள்ள விவசாயிகளிடம் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினருக்கும் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் களைப்பு நீங்க காலையில் தேநீர் வழங்குவது, இரவில் உணவு வழங்குவது போன்றவற்றிலும் சில அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. விவசாயிகள் 6 மாத இருப்புக்கு தேவையான உணவு பொருட்களையும் முன்னெச்சரிக்கையாக உடன் எடுத்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில், கல்சா என்ற உதவி வழங்கும் அமைப்பு சிங்கு எல்லையில் உள்ள விவசாயிகளுக்காக கால்களுக்கு மசாஜ் செய்து விடும் 25 உபகரணங்களை வழங்கியுள்ளது.
இதுபற்றி அந்த கல்சா எய்டு என்ற அமைப்பின் மேலாண் இயக்குனர் அமர்பிரீத் கூறும்பொழுது, இந்த போராட்டத்தில் வயது முதிர்ந்த விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளித்து இதனை வழங்கியுள்ளோம். அவர்கள் நீண்டகாலம் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதனால் அவர்களுக்கு களைப்பு ஏற்பட்டிருக்கும் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story