போராட்டக்களத்தை சமூக விரோதிகள் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்- விவசாயிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்


photo credit: PTI
x
photo credit: PTI
தினத்தந்தி 11 Dec 2020 7:06 PM GMT (Updated: 11 Dec 2020 7:06 PM GMT)

போராட்டக்களத்தை சமூக விரோதிகள் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள் எனவும், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் விவசாயிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது.

புதுடெல்லி, 

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 16-வது நாளாக நேற்றும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். சிங்கு, திக்ரி, சில்லா உள்ளிட்ட எல்லைகளை விவசாயிகள் ஆக்கிரமித்து இருப்பதால், அண்டை மாநிலங்களுக்கு செல்லும் போக்குவரத்து முடங்கி வருகிறது.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் மத்திய அரசு, இது தொடர்பாக சில யோசனைகள் அடங்கிய பரிந்துரை ஒன்றை விவசாயிகளுக்கு அனுப்பி வைத்தது. குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த எழுத்துப்பூர்வ உறுதிமொழி, மண்டிகள் தொடர்வதற்கான வழிமுறைகள் என பல்வேறு பரிந்துரைகள் அதில் அடங்கியிருந்தன.

ஆனால் இந்த யோசனைகளை நிராகரித்த விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக அறிவித்து உள்ளனர். குறிப்பாக டெல்லி செல்லும் சாலைகள் அனைத்தையும் மூடப்போவதாகவும், ரெயில் மறியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

எனினும் இந்த யோசனைகளை பரிசீலிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள மத்திய அரசு, விவசாயிகளின் கவலைகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் கூறி வருகிறது.

இந்த நிலையில் திக்ரி எல்லையில் போராடி வரும் விவசாயிகளில் ஒரு பகுதியினர், சமீபத்தில் மனித உரிமைகள் தினத்தையொட்டி சில கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை ஏந்தியிருந்தனர். குறிப்பாக, பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருக்கும் சமூக ஆர்வலர்களை விடுவிக்குமாறு அதில் கோரியிருந்தனர்.

இதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்கள் தளத்தை சமூக விரோதிகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது. இது குறித்த செய்திகளை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், விவசாயிகளுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் என்ற போர்வையில் சமூக விரோதிகள் சிலர் விவசாயிகளின் போராட்ட சூழலை கெடுக்க முயற்சிக்கின்றனர். எனவே அத்தகைய சமூக விரோதிகள் உங்களின் போராட்டக்களத்தை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள் என்றும், இந்த விவகாரத்தில் விழிப்புடன் இருக்குமாறும் விவசாய சகோதரர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

விவசாயிகளின் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அரசு தயாராக இருக்கிறது. விவசாயிகளின் கவலைகளை போக்கும் வகையில் யோசனைகள் அடங்கிய திட்டம் ஒன்று அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளுக்கும் அரசு தயாராக இருக்கிறது.

இவ்வாறு தோமர் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் தங்கள் போராட்டம் அரசியல் சார்பற்றது என விவசாயிகள் கூறியுள்ளனர். தங்கள் போராட்டக்களத்தை பயன்படுத்த பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் தாங்கள் மறுப்பு தெரிவித்ததாக சிங்கு எல்லையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் தெரிவித்தனர்.

அதே நேரம் திக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சமூக ஆர்வலர்களை விடுவிக்கக்கோரி பதாகைகள் ஏந்தியிருந்தது குறித்து கேட்டதற்கு, ‘அது, மனித உரிமை தினத்தை அவர்கள் அனுசரித்த முறையாக இருக்கலாம்’ என தெரிவித்தனர்.


Next Story