பிரதமரின் வெளிநாட்டு பயண விவரங்களை வெளியிடக்கூறும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
மன்மோகன்சிங், அதன் பிறகு பிரதமரான நரேந்திர மோடி இருவரும் விமானப்படை விமானத்தில் அதுவரை மேற்கொண்ட பயண விவரங்களை அளிக்கும்படி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2018-ம் ஆண்டு கோரியிருந்தார்.
புதுடெல்லி,
கடற்படையின் ஓய்வுபெற்ற அதிகாரி லோகேஷ் கே.பத்ரா, 2013-ம் தொடங்கி பிரதமர் மன்மோகன்சிங், அதன் பிறகு பிரதமரான நரேந்திர மோடி இருவரும் விமானப்படை விமானத்தில் அதுவரை மேற்கொண்ட பயண விவரங்களை அளிக்கும்படி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2018-ம் ஆண்டு கோரியிருந்தார்.
அதையடுத்து, உரிய விவரங்களை அளிக்க விமானப்படைக்கு மத்திய தகவல் ஆணையம் கடந்த ஜூலை 8-ந் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக விமானப்படை தாக்கல் செய்த மனு குறித்த விசாரணை, டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி நவீன் சாவ்லா அமர்வு முன் நேற்று நடைபெற்றது.
மனுவை பரிசீலித்த நீதிபதி, பிரதமருடன் பயணம் செய்த அமைச்சக அல்லது துறை அதிகாரிகள் குறித்த விவரங்களை வெளியிட முடியாது. இருப்பினும், பிரதமருடன் வெளிநாடு சென்ற பயணிகளின் எண்ணிக்கையை வெளியிடுவதில் தவறில்லை என தெரிவித்தார்.
பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், பிரதமரின் வெளிநாட்டு பயண விவரங்களை தகவல் உரிமை சட்டத்தின்கீழ் இந்திய விமானப் படை வெளியிட வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் (சி.ஐ.சி.) உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
இந்த மனு தொடர்பாக எதிர் மனுதாரர் லோகேஷ் கே. பத்ரா பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஏப்ரல் 12-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என தெரிவித்தார்.
Related Tags :
Next Story