3 ஆயிரம் பேருக்கு அரை மணிநேரத்தில் சுவையான உணவு; டெல்லியில் அசத்தும் விவசாயிகள்
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் 3 ஆயிரம் பேருக்கு தேவையான, சுவையான உணவை அரை மணிநேரத்தில் தயார் செய்து அசத்துகின்றனர்.
புதுடெல்லி,
விவசாயிகள் நலன்களை முன்னிட்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் வாங்க வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளில் ஒரு பிரிவினர் டெல்லி நோக்கிய பேரணியை தொடங்கினர்.
கடந்த நவம்பர் 26ந்தேதி முதல் தொடர்ந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தினால் தலைநகர் டெல்லி முடங்கியுள்ளது. விவசாயிகளுடன், அரசு பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என மத்திய வேளாண் மந்திரி தோமர் கூறியுள்ளார்.
விவசாயிகளின் போராட்டம் இன்று 17வது நாளாக நீடித்து வருகிறது. இதனை முன்னிட்டு திக்ரி எல்லையில் தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர். ஆளில்லா விமானமும் போராட்ட சூழலை கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானின் ஷாஜகான்பூரில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் நாளை காலை 11 மணி முதல் டிராக்டரில் பேரணியாக புறப்பட்டு செல்ல இருக்கின்றனர். அவர்கள் ஜெய்ப்பூர்-டெல்லி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என சன்யுக்த கிசான் அந்தோலன் விவசாய அமைப்பு தலைவர் கமல் பிரீத் சிங் பன்னு கூறியுள்ளார்.
போராட்டக்காரர்களுக்கு தேவையான உணவை தயார் செய்யும் பணியில் பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் நகரில் உள்ள குருத்வாராவின் உறுப்பினர்கள் தயார் செய்து வருகின்றனர். இதுபற்றி குர்வீந்தர் சிங் என்பவர் கூறும்பொழுது, நாங்கள் வைத்திருக்கும் பாய்லர் உதவியுடன் அரை மணிநேரத்தில் 3 ஆயிரம் பேருக்கு வேண்டிய, சுவையான உணவை தயார் செய்ய முடியும். நாங்கள் காலை 9 மணியில் இருந்து உணவை வழங்குகிறோம். விவசாயிகளுக்கு உணவு அளிப்பதற்காக நாங்கள் இங்கு வந்திருக்கிறோம் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story