கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் கூட்டம் இன்றி காணப்படும் சபரிமலை அய்யப்பன் கோவில்


கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் கூட்டம் இன்றி காணப்படும் சபரிமலை அய்யப்பன் கோவில்
x
தினத்தந்தி 12 Dec 2020 11:56 PM IST (Updated: 12 Dec 2020 11:56 PM IST)
t-max-icont-min-icon

சபரிமலை அய்யப்பன் கோவில் கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் கூட்டம் இன்றி காணப்படுகிறது.

சபரிமலை,

மண்டல பூஜை மற்றும், மகர விளக்கு காலங்களில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வழக்கம், இந்த ஆண்டு கொரோனா காரணமாக, பக்தர்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய வார நாட்களில் தினசரி 1,000 பக்தர்களும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் 2 ஆயிரம் பக்தர்களும் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

சாமியை தரிசிக்க, பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று அனைத்து தரப்பிலும் கோரிக்கை விடப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 2-ந்தேதி முதல் தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3 ஆயிரம் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆண்டுதோறும் மண்டல பூஜை காலங்களில் பக்தர்களால் நிரம்பி வழியும் சபரிமலை கோவில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் கூட்டம் இன்றி காணப்படுகிறது. 

தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என விதிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாக சபரிமலையில் இப்போது கூட்டம் இன்றி விரிச்சோடி காண்படுகிறது.

இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சாமியை நிதானமாக நின்று தரிசித்து வருவதாக கூறியுள்ளனர். தமிழகம் உட்பட அந்தந்த மாநில பக்தர்கள், தங்கள் ஊர்களில் உள்ள அய்யப்பன் கோவிலிலேயே தரிசனத்தை முடித்துக் கொள்வதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டை போல் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், சபரிமலைக்கு வரும் வருமானம் மிகவும் குறைந்து உள்ளது. கடந்த மாதம் 15-ந் தேதியில் இருந்து 23 நாட்களில் நடை வருமானமாக ரூ.3 கோடியே 82 லட்சம் மட்டுமே கிடைத்து உள்ளது என்று திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறினார்.

Next Story