கொச்சி அருகே கொடூரம்: வளர்ப்பு நாயை காருக்கு பின்னால் கட்டி சாலையில் இழுத்து சென்றவர் கைது


கொச்சி அருகே கொடூரம்: வளர்ப்பு நாயை காருக்கு பின்னால் கட்டி சாலையில் இழுத்து சென்றவர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2020 4:36 AM IST (Updated: 13 Dec 2020 4:36 AM IST)
t-max-icont-min-icon

கொச்சி அருகே வளர்ப்பு நாயை காருக்கு பின்னால் கட்டி இழுத்து சென்றவர் கைது செய்யப்பட்டார். அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய மந்திரி உத்தரவிட்டார்.

பாலக்காடு,

கொச்சி அருகே வளர்ப்பு நாயை காருக்கு பின்னால் கட்டி இழுத்து சென்றவர் கைது செய்யப்பட்டார். அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய மந்திரி உத்தரவிட்டார்.

இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள நெடும்பாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் யூசுப். இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார். இதற்கிடையில் அந்த நாயை அவரால் தொடர்ந்து பராமரிக்க முடியவில்லை. இதனால் அதனை வேறு இடத்தில் விட முடிவு செய்தார்.

அதன்படி தனது காரின் பின்பகுதியில்(டிக்கி) கயிறு மூலம் நாயை கட்டினார். தொடர்ந்து காரை ஓட்டி சென்றார். சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நாயை இழுத்து சென்றார். அப்போது படுகாயம் அடைந்த நாய், வலியால் துடித்தது. எனினும் இரக்கமின்றி அவர் தொடர்ந்து காரை ஓட்டி சென்றார்.

இதை அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர், தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்தார். அந்த வீடியோ பதிவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். தொடர்ந்து வீடியோ வைரலாக பரவியது. மேலும் போக்குவரத்துத்துறை மந்திரி சசீந்திரனுக்கு தகவல் சென்றது. அவர் விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து செங்கமநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கொடூர செயலில் ஈடுபட்ட யூசுப்பை கைது செய்தனர். மேலும் அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் படுகாயம் அடைந்த நாயை மீட்டு அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு அந்த நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையில் யூசுப்பின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்துத்துறை மந்திரி சசீந்திரன் உத்தரவிட்டார். அதன்பேரில் அவரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. வளர்ப்பு நாயை இரக்கமின்றி காரில் கட்டி இழுத்து சென்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story