லடாக் எல்லை மோதலில் தேச பாதுகாப்பு சவாலை இந்தியா சந்திக்கும் மத்திய மந்திரி ஜெய்சங்கர் அறிவிப்பு


லடாக் எல்லை மோதலில் தேச பாதுகாப்பு சவாலை இந்தியா சந்திக்கும் மத்திய மந்திரி ஜெய்சங்கர் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Dec 2020 5:07 AM IST (Updated: 13 Dec 2020 5:07 AM IST)
t-max-icont-min-icon

லடாக் எல்லை மோதலில், தேச பாதுகாப்புக்கான சவாலை இந்தியா சந்திக்கும் என்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.

புதுடெல்லி, 

கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன துருப்புகள் தொடர்ந்து அத்துமீறியபோது இந்தப் படைகள் சரியான பதிலடி கொடுத்து வந்தன.

இந்த மோதல்களைத் தொடர்ந்து இரு தரப்பும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினரையும், தளவாடங்களையும் குவித்துள்ளதால் அங்கு கடந்த 7 மாத காலமாக பதற்றம் நீடிக்கிறது.

இந்த தருணத்தில் டெல்லியில் நேற்று நடந்த பிக்கியின் (இந்திய வர்த்தக, தொழில்சபைகள் கூட்டமைப்பின்) வருடாந்திர மாநாட்டில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடந்துள்ள சம்பவங்கள் மிகவும் கவலைக்கு உரியவை. அவை சில அடிப்படை கவலைகளை எழுப்பி உள்ளன. அங்கு நடந்ததெல்லாம் சீனாவின் நலனுக்கானது அல்ல. ஏனென்றால் சீனா செய்தது, இந்திய மக்களின் உணர்வுகளை பாதித்துள்ளது. கடந்த பல தசாப்தங்களாக (தசாப்தம் என்பது 10 ஆண்டுகள்) சீனாவை பற்றிய இந்திய மக்களின் உணர்வு மாற்றங்களை நான் கண்டுவந்துள்ளேன்.

இரு தரப்பிலும் உறவை வளர்ப்பதற்கு நிறைய வேலைகள் நடந்துள்ளன.

இந்த ஆண்டில் நடந்தவை, அதற்கு சிறிதும் உதவுவதாக அமையவில்லை. மிகவும் கவனமாக உருவாக்கப்பட்ட நல்லெண்ணம் கலைந்து போகும் என்பதுதான் உண்மையான ஆபத்து ஆகும். நாம் சோதனைக்கு ஆளாகி இருக்கிறோம். ஆனாலும் நாம் எழுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நாம் தேசிய பாதுகாப்புக் கான சவாலை சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story