பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் தரப்பட்ட இலக்குகளை, இந்தியா தாண்டிச் செல்லவுள்ளது- பிரதமர் மோடி
2047 ஆம் ஆண்டு இந்தியா நவீன நாடாக தனது 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் என பிரதமர் மோடி கூறினார்.
லண்டன்,
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் 5-ம் ஆண்டு தினத்தை ஒட்டி உலகத் தலைவர்களின் உச்சி மாநாடு ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துவக்க உரையாற்றிய ஐநா தலைவர் அண்டோனியா குட்டரெஸ் கூறுகையில், “ பருவ நிலை அவசர நிலையை உலகில் உள்ள எல்லா நாடுகளும் அறிவிக்கவேண்டும் கார்பன் சமநிலை எட்டும் வரை இந்த அவசர நிலை தொடரவேண்டும்.
2015- ஆம் ஆண்டு பருவ நிலை மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள், வெப்ப நிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை. எனவே, இந்த முடிவை நாம் மாற்றாவிட்டால் நடப்பு நூற்றாண்டில் வெப்ப நிலை 3.0 டிகிரி செல்சியஸுக்கும் மேல் செல்லக்கூடும்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் உரையாற்றினார். மோடி கூறுகையில், “2022-ம் ஆண்டு 175 கிகா வாட் புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தித் திறன் என்ற இலக்கை நோக்கி இந்தியா செல்கிறது .2030ம் ஆண்டு வாக்கில் இதனை 450 கிகா வாட் என்ற அளவுக்கு மேம்படுத்த இலக்கு வைக்கப்படும்.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் தரப்பட்ட இலக்குகளை இந்தியா தாண்டிச் செல்லவுள்ளது. கடந்த 2005- ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது இந்தியாவில் கார்பன் வெளியேற்றம் 21 சதவீதம் குறைந்துள்ளது. 2047 ஆம் ஆண்டு இந்தியா நவீன நாடாக தனது 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்” என்றார்.
Related Tags :
Next Story