குடும்ப கட்டுப்பாடு செய்யும்படி கட்டாயப்படுத்த முடியாது- மத்திய அரசு


Photo Credit: PTI
x
Photo Credit: PTI
தினத்தந்தி 13 Dec 2020 5:53 AM IST (Updated: 13 Dec 2020 5:53 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வதை கட்டாயப்படுத்த முடியாது என மக்கள் தொகையை கட்டுப்படுத்த கோரிய வழக்கில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

பா.ஜனதா வக்கீல் அஸ்வினி உபாத்யாயா, டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தாமல், சுத்தமான காற்று, தூய்மையான நீர், ஆரோக்கியம், அனைவருக்குமான கல்வி போன்ற அடிப்படை உரிமைகளை பாதுகாக்க முடியாது என தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு மக்கள் தொகை பெருக்க கட்டுப்பாடு விதிகளை வகுப்பது நாடாளுமன்றம், சட்டமன்றத்தின் வேலையாகும். அதுதொடர்பான விதிகளை உருவாக்குவது நீதிமன்றத்தின் வேலை இல்லை என மனுவை தள்ளுபடி செய்தது.

டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அஸ்வினி உபாத்யாயா மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் கடந்த ஜனவரி மாதம் நடந்த போது, மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறையின் உதவி செயலர் பாமா நாராயணன் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

மாநில பட்டியலில் உள்ள பொது சுகாதாரம் தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்வது மாநில அரசுகளின் கடமையாகும். மாநில அரசுகள் மேற்கொள்ளும் சுகாதார சீர்திருத்த திட்டங்களுக்கு உரிய உதவிகளை மத்திய சுகாதாரத்துறை அளித்து வருகிறது. சுகாதார திட்டங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துவதில் மத்திய சுகாதாரத்துறைக்கு எவ்வித பங்கும் இல்லை.

விரிவான முழுமையான தேசிய மக்கள்தொகை கொள்கை திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை 2000-ம் ஆண்டு வகுத்து செயல்படுத்தி வருகிறது.1994-ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகை மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச மாநாட்டில், குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள கட்டாயப்படுத்த கூடாது என தெள்ளத்தெளிவாக தெரிவித்து இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

குறிப்பிட்ட குழந்தைகள் எண்ணிக்கை மட்டும் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்ட நாடுகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி, மக்கள்தொகையில் உருமாற்றத்தை உருவாக்கியுள்ளதை சர்வதேச அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

கருவுறுதிறன் குறைந்தது

தேசிய மக்கள் தொகை திட்டத்தை செயல்படுத்த தொடங்கியபோது மொத்த கருவுறுதிறன் 3.2 ஆக இருந்தது, தற்போது 2.2 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் மொத்த கருவுறுதிறன் விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது.

2017-ம் ஆண்டு தேசிய சுகாதார திட்டத்திலும் 2025-ம் ஆண்டுக்குள் மொத்த கருவுறுதிறன் விகிதம் 2.5 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செயல்படுத்தப்படும் குடும்ப நல திட்டம் தன்னார்வ அடிப்படையில், குழந்தைகளின் எண்ணிக்கையை தம்பதியரே எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல் தீர்மானிக்க வகை செய்யப்பட்டுள்ளது. மேற்கண்டவற்றை அடிப்படையில் மனுதாரரின் மேல்முறையீடு மனுவை முடித்து வைத்து தள்ளுபடி செய்யவேண்டும்.

இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story