திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குழந்தைகள், முதியோர் அனைவரும் சாமி தரிசனம் செய்யலாம் - தேவஸ்தானம் உத்தரவு


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குழந்தைகள், முதியோர் அனைவரும் சாமி தரிசனம் செய்யலாம் - தேவஸ்தானம் உத்தரவு
x
தினத்தந்தி 13 Dec 2020 1:52 PM IST (Updated: 13 Dec 2020 1:52 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குழந்தைகள், முதியோர் அனைவரும் சாமி தரிசனம் செய்ய, கட்டுப்பாடுகளை நீக்கி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.

திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் முதியோர், 10 வயதுக்குட்பட்டோர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாமல் இருந்தனர். மூத்த குடிமக்கள், குழந்தைகளை கோவிலில் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் எனத் தேவஸ்தானத்துக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக, குழந்தைகளுக்கு முதல் தலைமுடி காணிக்கை செலுத்துதல், காது குத்துதல், அன்னப்பிரசாதம் ஊட்டுதல், பெயர் சூட்டுதல், முதியோர்களின் சஷ்டியப்த பூர்த்தி ஆகிய சடங்குகள் கோவில் பகுதியில் செய்வது என்றும், எனவே முதியோர்கள், குழந்தைகள், பக்தர்கள் ஆகியோரை கோவிலில் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் தொலைப்பேசி மூலம் (டயல் யுவர் இ.ஓ) பக்தர்களிடம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சியில் கோாரிக்கை வைக்கப்பட்டது.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, கொரோனா தொற்று பரவலால் விதிக்கப்பட்டு இருந்த தடை மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கி 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 10 வயதுக்குட்பட்டோர் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம், எனத் தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. 

ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வர வேண்டும் என்றும், கோவிலில் அவர்களுக்கு தனி வரிசைகள் இல்லை என்றும், டிக்கெட்டுகள் உள்ள பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Next Story