வாகன போக்குவரத்து முடக்கம்: டெல்லி-நொய்டா எல்லையை திறந்து விட டெல்லி போலீசார் முடிவு


வாகன போக்குவரத்து முடக்கம்:  டெல்லி-நொய்டா எல்லையை திறந்து விட டெல்லி போலீசார் முடிவு
x
தினத்தந்தி 13 Dec 2020 3:53 PM IST (Updated: 13 Dec 2020 3:53 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில் இன்றிரவுக்குள் டெல்லி-நொய்டா எல்லை திறந்து விடப்படும் என டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி,

விவசாயிகளின் நலன்களை முன்னிட்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் வாங்க வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளில் ஒரு பிரிவினர் டெல்லி நோக்கிய பேரணியை தொடங்கினர்.

கடந்த நவம்பர் 26ந்தேதி முதல் தொடர்ந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தினால் தலைநகர் டெல்லி முடங்கியுள்ளது.  விவசாயிகளுடன், அரசு பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக தீர்வு காணப்படவில்லை.  இந்நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என மத்திய வேளாண் மந்திரி தோமர் கூறியுள்ளார்.

விவசாயிகளின் போராட்டம் இன்று 18வது நாளாக நீடித்து வருகிறது.  இதனை முன்னிட்டு டெல்லி எல்லையில் தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்கள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.  ஆளில்லா விமானமும் போராட்ட சூழலை கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரை இணைக்கும் சாலை பகுதி அமைந்த சில்லா என்ற இடத்தில் விவசாயிகள் குழு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் கடந்த 2 வாரங்களாக அந்த எல்லை பகுதி மூடப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அந்த பகுதி வழியே செல்லும் வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது.  இதற்கு தீர்வு காணப்படும் வகையில், டெல்லி துணை ஆணையர் (கிழக்கு) ஜஸ்மீத் சிங் தலைமையிலான போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பலன் ஏற்பட்டு உள்ளது.  வாகனங்கள் செல்வதற்கு விவசாயிகள் ஒப்புதல் அளித்து உள்ளனர்.  இதனால், இன்றிரவுக்குள் டெல்லி-நொய்டா எல்லை திறந்து விடப்படும் என டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

விவசாயிகளின் போராட்டத்தினால் சிங்கு, திக்ரி, ஆச்சண்டி, ஜரோடா, பியாவோ மணியாரி மற்றும் நகரின் வெளிப்புற மற்றும் தென்மேற்கு பகுதியில் அமைந்த முங்கேஷ்பூர் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள டெல்லி மற்றும் நொய்டா ஆகிய இரு நகரங்களை இணைக்கும் சில்லா எல்லை என 7 எல்லைகள் முழுவதும் மூடப்பட்டு உள்ளன.

இதுதவிர டெல்லி நோக்கி செல்லும் வாகனங்களுக்கான டெல்லி-மீரட் விரைவு சாலையும் மூடப்பட்டு உள்ளது.  இதனால், அந்த பகுதி வழியே டெல்லி நோக்கி செல்லும் வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது.  தலைநகர் டெல்லிக்கு செல்வோர், சொந்த மாநிலம் திரும்புவோர் என பல்வேறு தரப்பு மக்களும் விவசாயிகளின் போராட்டத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story