பிரணாப் முகர்ஜியின் புத்தகம் குறித்து கருத்து கூற மாட்டேன் - வீரப்பமொய்லி


பிரணாப் முகர்ஜியின் புத்தகம் குறித்து கருத்து கூற மாட்டேன் - வீரப்பமொய்லி
x
தினத்தந்தி 14 Dec 2020 5:03 AM IST (Updated: 14 Dec 2020 5:03 AM IST)
t-max-icont-min-icon

பிரணாப் முகர்ஜியின் புத்தகம் குறித்து கருத்து கூற மாட்டேன் என்று வீரப்பமொய்லி கூறியுள்ளார்.

பெங்களூரு, 

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் சிலர், 2004-ம் ஆண்டு மன்மோகன்சிங்கிற்கு பதிலாக பிரணாப் முகர்ஜி பிரதமராகி இருந்தால், 2014-ம் ஆண்டு காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து இருக்காது என்று கருத்து தெரிவித்தனர். இந்த கருத்தை முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்து இருந்தார்.

இதுகுறித்து உயிருடன் இருந்தபோது அவர் தனது அரசியல் அனுபவம் குறித்து எழுதிய புத்தகத்தில், “காங்கிரஸ் தலைவர்கள் கூறும் இந்த கருத்தை நான் ஏற்க மாட்டேன். இருந்தாலும், என்னை ஜனாதிபதியாக ஆக்கிய பிறகு, காங்கிரஸ் தலைமை கட்சி விஷயங்களில் கவனம் செலுத்த தவறிவிட்டது. 

சோனியா காந்தியால் கட்சி விஷயங்களை சரியான முறையில் கையாள முடியவில்லை. பிரதமராக இருந்த மன்மோகன்சிங் நாடாளுமன்றத்திற்கு நீண்ட காலம் வராததால் அவரை எம்.பி.க்களால் தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியவில்லை“ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த புத்தகம் வருகிற ஜனவரி மாதம் வெளிவர உள்ளது. அதற்கு முன்னதாகவே அந்த புத்தகத்தை வெளியிடுபவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்பமொய்லி பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தகத்தை முழுமையாக படிப்பதற்கு முன்பு அதுபற்றி நான் கருத்து கூற மாட்டேன். கருத்து கூறவும் விரும்பவில்லை. 

அவர் என்ன எழுதியுள்ளார் என்பது குறித்து கருத்து தெரிவிக்க அந்த புத்தகத்தை படிக்க வேண்டியது அவசியம். அவர் இவ்வாறு எழுதி இருப்பார் என்று கருதி கருத்து கூறுவது தவறானது“ என்றார்.

Next Story