புதிய வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு தயார்: மத்திய மந்திரி தகவல்
புதிய வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில், இந்த சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி கூறினார். ஐதராபாத்தில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இது தொடர்பாக அவர் கூறியதாவது:–
பஞ்சாப் விவசாயிகளை தவிர நாட்டின் அனைத்து விவசாயிகளும் புதிய வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். விவசாயிகளின் பிரச்சினைகளை கவனித்து சரிசெய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. காரணம், அரசும் நாட்டின் விவசாயிதான்.
விவசாயிகளின் நலன் கருதியே புதிய வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் அரசியல்வாதிகளின் வலையில் அவர்கள் விழக்கூடாது.
புதிய வேளாண் சட்டங்கள் மூலம், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டின் எந்த இடத்திலும் நல்ல விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் எந்த சந்தைக்கட்டணமும், பிற கமிஷன்களும் செலுத்த தேவையில்லை.
அதேநேரம், வேளாண் சட்டங்களில் தேவையான திருத்தங்களை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. அதற்கான யோசனைகளை விவசாயிகள் தெரிவிக்கலாம். மாறாக, வேளாண் சட்டங்களையே திரும்ப பெறவேண்டும் என்று சில விவசாய சங்கங்கள் கூறுவது சரியான வழக்கமல்ல.
புதிய வேளாண் சட்டத்தின்படி, குறைந்தபட்ச ஆதார விலை முறை வலுப்படுத்தப்படும். விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் நோக்கில் மோடி தலைமையிலான மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. விவசாயிகளை துன்புறுத்துவது எங்கள் நோக்கமல்ல.
விவசாயிகள் நலனுக்காக, மின்வெட்டை குறைக்கவும், உர தட்டுப்பாட்டை முற்றிலுமாக நீக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது.
தெலுங்கானா, ஆந்திரா விவசாயிகளுக்கு ‘கிசான்’ என்ற பிராண்ட் பெயரில் யூரியா உரம் வழங்கப்படும். ஒரே தேசம் ஒரே மின்வினியோகம் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.