விராட் போர்க்கப்பலை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும்; மத்திய அரசுக்கு, சிவசேனா கோரிக்கை
விராட் கப்பல் உடைப்பதற்காக மும்பையில் இருந்து குஜராத்தில் உள்ள அலாங் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
மும்பை,
இந்திய கடற்படையில் 30 ஆண்டுகளாக நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட ஐ.என்.எஸ். விராட் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்றது. அதன்பிறகு விராட் போர்க்கப்பலை அருங்காட்சியகமாகவோ அல்லது மிதக்கும் ஓட்டலாக மாற்றவோ திட்டமிடப்பட்டது. ஆனால் அது கைகூடாமல் போனது.
இந்தநிலையில் அந்த கப்பலை உடைக்கும் ஒப்பந்தத்தை குஜராத்தை சேர்ந்த ஸ்ரீராம் குழுமம் பெற்று உள்ளது. எனவே விராட் கப்பல் உடைப்பதற்காக மும்பையில் இருந்து குஜராத்தில் உள்ள அலாங் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்தநிலையில் மராட்டியத்தில் ஆளும் சிவசேனா கட்சி அந்த விமானம் தாக்கி போர்க்கப்பலை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி.யும், செய்தி தொடர்பாளருமான பிரியங்கா சதுர்வேதி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
விராட் போர்க்கப்பலின் பாதுகாப்பு சேவை மிகவும் சிறப்பு மிக்கது. மேலும் வருங்கால சந்ததியினர் நினைவில் கொள்ள வேண்டியது. எனவே இந்த அரசு விரும்பினால் விராட் போர் கப்பலை காப்பற்ற முடியும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த கப்பலை மீட்டெடுப்பதிலும், பாதுகாப்பதிலும் மராட்டிய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். இந்தியாவின் தேசியவாதம், தேசபக்தி மற்றும் பெருமையை தாங்கி பிடிக்கும் வாழும், சுவாசிக்கும் மற்றும் செழுமையான நினைவு சின்னமாக விராட் போர் கப்பல் இருக்கட்டும். நமது செழிப்பான வரலாற்றை அழிப்பதை விட அதற்கு பாதுகாப்பாக இருப்போம்.
தடையில்லா சான்றிதழ் கப்பலை காப்பாற்ற உதவும். இந்தியாவின் கடல்சார் வரலாற்றின் முக்கியத்துவத்தை குடிமக்களுக்கு உணர்ந்த நாம் பணிநீக்கம் செய்யப்பட்ட இந்த போர் கப்பலை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story