இந்திய இளைஞர்கள் விண்வெளித்துறையில் உலகளாவிய சாதனைகள் புரிவர்: பிரதமர் மோடி
விண்வெளி துறையில் தனியார் பங்கேற்பதால், இந்திய தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன், அவர்கள் உலகப்புகழ் பெறுவார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
விண்வெளிதுறை சார்ந்த செயல்பாடுகளில் தனியார் துறையினர் பங்கேற்க அனுமதிப்பது என்று கடந்த ஜூன் மாதம் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, செயற்கைகோள் செலுத்துவது, சிறியரக செயற்கைகோள் செலுத்து வாகனங்கள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட விருப்பம் தெரிவித்து 25-க்கு மேற்பட்ட நிறுவனங்கள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (இஸ்ரோ) அணுகி உள்ளன.
இந்தநிலையில், விண்வெளி துறையில் ஈடுபட விரும்பும் முக்கிய தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் உரையாடினார்.
அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது:-
விண்வெளி துறையில் பொது-தனியார் கூட்டுக்கான காலம் தொடங்கி உள்ளது. விண்வெளி துறையில் ஈடுபடும் தனியார் துறையினருக்கு மத்திய அரசு முழுமையான, முழுமனதான ஆதரவு அளிக்கும். ஏவுதளம் உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படும். ராக்கெட், செயற்கைகோள் ஆகியவற்றை தயாரிக்க தனியார் நிறுவனங்கள் விரும்புவது, விண்வெளி துறையில் இந்தியாவின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும்.
விண்வெளி துறையில் தனியார் பங்கேற்பதால், உயர் தொழில்நுட்ப பணிகள் உருவாகும். அதனால், ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் இதர தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படித்த திறமைசாலிகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். தகவல் தொழில்நுட்ப துறையில் இந்திய திறமைசாலிகள் உலகப்புகழ் பெற்றதுபோல், விண்வெளி துறையிலும் உலகப்புகழ் பெறுவார்கள்.
இந்த சீர்திருத்தம், விண்வெளி சந்தை போட்டியில் இந்தியா ஈடுபடவும், விண்வெளி திட்டங்களின் பலன்கள், ஏழைகளை சென்றடையவும் உதவும். எனவே, தனியார் நிறுவனங்கள், துணிந்து சிந்திப்பதுடன் நாட்டு நலனுக்காக பாடுபடுங்கள்.‘இஸ்ரோ’வுடன் சேர்ந்து பயணியுங்கள். இந்தியா விரைவில் விண்வெளி தளவாடங்கள் உற்பத்தி கூடமாக மாறும்” இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story