5 மாதங்களுக்குப்பிறகு சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3½ லட்சமாக சரிவு


5 மாதங்களுக்குப்பிறகு சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3½ லட்சமாக சரிவு
x
தினத்தந்தி 15 Dec 2020 4:46 AM IST (Updated: 15 Dec 2020 4:46 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா முழுவதும் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 5 மாதங்களுக்குப்பிறகு 3½ லட்சமாக சரிந்தது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய கொடிய இருள் படிப்படியாக விலகி ஒளி பிறக்க தொடங்கி இருக்கிறது. புதிய பாதிப்புகள் குறைந்து வருவதுடன், தொற்றில் இருந்து மீண்டு வருவோர் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. இதனால் கொரோனாவின் கொடிய நாட்கள் மறையத்தொடங்கி உள்ளன.

கொரோனாவின் இந்த நேர்மறையான அம்சங்கள் நேற்றும் நீடித்தது. குறிப்பாக நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் வெறும் 27 ஆயிரத்து 71 பேர் மட்டுமே கொரோனாவிடம் சிக்கியிருந்தனர்.

சமீப நாட்களாக 30 ஆயிரத்துக்கு மேல் தினசரி தொற்று ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று 30 ஆயிரத்துக்கு கீழே சரிந்திருப்பது ஆறுதலை கொடுத்திருக்கிறது. இவ்வாறு புதிய பாதிப்புகள் 30 ஆயிரத்துக்கு குறைவாக கண்டறியப்பட்டது, இந்த மாதத்தில் இது 3-வது முறையாகும்.

புதிதாக பாதிக்கப்பட்டவர் களையும் சேர்த்து இதுவரை இந்தியாவில் கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 98 லட்சத்து 84 ஆயிரத்து 100 ஆகி இருக்கிறது. இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் மேலும் 336 பேர் கொரோனாவால் மடிந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த சாவு எண்ணிக்கை1 லட்சத்து 43 ஆயிரத்து 355 ஆக உயர்ந்துள்ளது. எனினும் நாட்டின் கொரோனா மரண விகிதம் 1.45 ஆகவே நீடிக்கிறது.

புதிதாக கொரோனாவிடம் சிக்கியவர்களை விட அதிக நோயாளிகள் மேற்படி 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ளனர். அந்தவகையில் 30 ஆயிரத்து 695 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர்.

இதன் மூலம் இந்தியாவில் இதுவரை தொற்றை வென்றவர்களின் எண்ணிக்கை 93 லட்சத்து 88 ஆயிரத்து 159 ஆக உயர்ந்தது. இது மொத்த பாதிப்பில் 94.98 சதவீதம் ஆகும். நாடு முழுவதும் புதிய பாதிப்புகளை விட, புதிதாக குணமடைவோரின் எண்ணிக்கை கடந்த 17 நாளாக அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி அதிகமானோர் குணமடைந்து வருவதால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி வெறும் 3 லட்சத்து 52 ஆயிரத்து 586 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இது முந்தைய தினத்தைவிட 3,960 பேர் குறைவாகும். மேலும் மொத்த பாதிப்பில் வெறும் 3.57 சதவீதத்தினர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

நாடு முழுவதும் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 3½ லட்சமாக குறைந்திருப்பது கடந்த சுமார் 5 மாதங்களுக்குப்பிறகு இதுவே முதல் முறையாகும். அந்தவகையில் கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி 3 லட்சத்து 58 ஆயிரத்து 692 பேர் சிகிச்சையில் இருந்தனர். அதன்பின்னர் 149 நாட்களுக்குப்பிறகு தற்போதுதான் இந்த குறைவான எண்ணிக்கை வந்திருக்கிறது.

மேற்படி 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்களில் சுமார் 76 சதவீதம் பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் அதிகபட்சமாக கேரளவாசிகள் 5,258 பேர் குணமடைந்துள்ளனர். இதைப்போல மராட்டியர்கள் 3,083 பேரும், மேற்கு வங்காளத்தினர் 2,994 பேரும் மீண்டுள்ளனர்.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களிலும் 76 சதவீதத்தினர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதிலும் 4,698 பாதிப்புகளுடன் கேரளாதான் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து மராட்டியத்தில் 3,717 பேரும், மேற்கு வங்காளத்தில் 2,580 பேரும் ஒரே நாளில் தொற்றில் சிக்கியுள்ளனர்.

மேற்படி 24 மணி நேரத்தில் மராட்டியத்தில் 70 மரணங்களும், மேற்கு வங்காளம், டெல்லியில் முறையே 47 மற்றும் 33 மரணங்களும் கொரோனாவால் நிகழ்ந்துள்ளன. விடுமுறை தினமான நேற்று முன்தினம் நாடு முழுவதும் 8 லட்சத்து 55 ஆயிரத்து 157 சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 15 கோடியே 45 லட்சத்து 66 ஆயிரத்து 990 ஆகி இருக்கிறது.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.


Next Story