அடுத்த கல்வியாண்டு எவ்வாறு திட்டமிடப்பட்டு உள்ளது? மத்திய கல்வி மந்திரி விளக்கம்


அடுத்த கல்வியாண்டு எவ்வாறு திட்டமிடப்பட்டு உள்ளது? மத்திய கல்வி மந்திரி விளக்கம்
x
தினத்தந்தி 15 Dec 2020 5:58 AM IST (Updated: 15 Dec 2020 5:58 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த கல்வியாண்டு எவ்வாறு திட்டமிடப்பட்டு உள்ளது? என்பதற்கு மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி, 

மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் ஆன்லைனில் அளித்த பேட்டி வருமாறு:-

பிராந்திய மொழிகளில் தொழில்நுட்ப கல்வி என்பது மாணவர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த ஒன்று என கருதுகிறேன். அடுத்த ஆண்டு முதல் பிராந்திய மொழிகளில் தொழில்நுட்ப கல்வியை வழங்கும் நடவடிக்கை, கல்வியில் சமத்துவம் என்ற கருத்தை ஊக்குவிக்கும். சமத்துவத்தை உறுதி செய்வதையே அது நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால் ஐ.ஐ.டி.களின் தரத்தில் எந்த சமரசமும் கிடையாது.

சில இடங்களில் உள்ள ஐ.ஐ.டி.களில் இதுகுறித்து கவலை தெரிவிக்கப்படுகிறது. அதுகுறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.

புதிய கல்விக்கொள்கையின்படி நடைபெறும் இந்த சீர்திருத்தம், கிராமப்புறங்களை சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பிராந்திய மொழிகளில் படிக்கும் மாணவர்கள் தொழில்நுட்ப படிப்புகளில் சிறந்து விளங்குவதற்கான சூழலை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இதனால் ஒட்டுமொத்த தரமும் மேம்படும் என்று நினைக்கிறோம்.

மாணவர்கள் தங்களது தாய்மொழியில் கருத்துகளை புரிந்துகொள்ளும்போது அவர்களால் சிறப்பாக சிந்திக்க முடியும். ஆங்கிலத்தில் படிக்க விரும்பும் மாணவர்கள் ஆங்கிலத்தில் படிக்கலாம். ஆங்கிலம் தவிர்த்து, தாய்மொழியில் படிக்கும் மாணவர்களும் சிறந்து விளங்கக்கூடிய சூழலை உயர்கல்வி நிறுவனங்களில் உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்.

இந்த முயற்சி அடுத்த ஆண்டில் முதல்கட்டமாக நடைபெறும். பாட விவரங்கள், பாடப்புத்தகங்களின் தரம், தாய்மொழியில் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற பல சிக்கல்கள் இதில் உள்ளன என்பதையும் புரிந்து இருக்கிறோம். எனவே அதற்கான விரிவான செயல்திட்டம் உருவாக்கப்படுகிறது.

தொழில்நுட்ப கல்வியை தாய்மொழியில் வழங்குவதுபோல ஜே.இ.இ. தேர்வையும் பிராந்திய மொழிகளில் நடத்த முடிவு செய்து உள்ளோம்.

2020-2021-ம் கல்வியாண்டு, கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே அடுத்த கல்வியாண்டு குறித்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் நான் ஆலோசனை நடத்தி வருகிறேன். அவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். இது தொடர்பாக 17-ந்தேதி (நாளை மறுநாள்) பதில் அளிப்பேன்.

வரும் கல்வியாண்டுகளில் ஆன்லைன் கல்வியை முழுமையாக செயல்படுத்துவது குறித்து எந்த திட்டமும் தற்போது இல்லை. வகுப்பறை கற்றல், கற்பித்தலை ஆன்லைனுக்கு மாற்ற முடியாது. இருப்பினும் இரண்டும் கலந்த கல்வி இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story