பட்ஜெட் அமர்வை முன்கூட்டி நடத்த பரிசீலனை; நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி தகவல்


பட்ஜெட் அமர்வை முன்கூட்டி நடத்த பரிசீலனை; நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி  தகவல்
x
தினத்தந்தி 16 Dec 2020 3:23 AM IST (Updated: 16 Dec 2020 3:23 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து ஆகிறது. பட்ஜெட் அமர்வை முன்கூட்டியே நடத்த பரிசீலிக்கப்படுகிறது.

புதுடெல்லி,

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் என 3 தொடர்களை சந்திப்பது வழக்கம். ஒரு கூட்டத்தொடருக்கும், மற்றொரு கூட்டத்தொடருக்கும் இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது. இது அரசியல் சாசனம் வகுத்து அளித்துள்ள விதிமுறை ஆகும்.

கடைசியாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ந் தேதி தொடங்கியது. அக்டோபர் 1-ந் தேதி முடிய இருந்தது. ஆனால் கொரோனா பரவல் அச்சம் காரணமாக செப்டம்பர் 23-ந் தேதி முன்கூட்டியே முடிந்தது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் கடைசி வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரசுக்கு எதிராக நாடு போராடிக்கொண்டிருப்பதால் குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, டெல்லியில் விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகிற நிலையில், சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்கள் குறித்து குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி இருந்தார்.இது தொடர்பாக அவருக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை நிர்வகிக்க குளிர் மாதங்கள் மிக முக்கியமானவை. நாம் டிசம்பர் மாதத்தின் மத்தியில் இருக்கிறோம். கொரோனா வைரஸ் தடுப்பூசி, விரைவில் வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக நாடாளுமன்ற இரு சபை கட்சித்தலைவர் களை முறைப்படி தொடர்பு கொண்டு பேசப்பட்டது. அவர்கள், கொரோனா வைரஸ் பரவல் தொடர்வது குறித்து கவலை தெரிவித்தார்கள். குளிர்கால கூட்டத்தொடரை கைவிட்டு விடலாம் எனவும் கருத்து தெரிவித்தார்கள்.

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தை விரைவாக நடத்த அரசு தயாராக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை இல்லாதவகையில் எழுந்துள்ள சூழல்களை கவனத்தில் கொள்கிறபோது, ஜனவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது பொருத்தமாக இருக்கும்” இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

எனவே நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் ரத்து ஆகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே தொடங்குவதற்கு அரசு பரிசீலிக்கிறது என்பது தெளிவாகிறது.


Next Story