வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் - விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்


வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் -  விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 16 Dec 2020 6:35 AM GMT (Updated: 2020-12-16T12:05:11+05:30)

அரசின் பரிந்துரைகளை நிராகரிக்கிறோம், 3 சட்டங்களைத் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

புதுடெல்லி,

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் முற்றுகை போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் அடுத்தகட்ட போராட்டங்களை நோக்கி விவசாயிகள் நகர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்புகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் ஒருநாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக டெல்லியில் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி டெல்லி-நொய்டா சாலையில் அமைந்துள்ள சில்லா எல்லையில் இன்று மறியலில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.

இந்நிலையில், டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகள் கூறியதாவது:-

வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு வழங்கிய அனைத்து பரிந்துரைகளையும் நிராகரிப்பதாகவும் 3 சட்டங்களைத் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.

விவசாயிகளின் திடீர் சாலை மறியலால் நொய்டா-டெல்லி சில்லா எல்லையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். 

Next Story