போராட்டக்களம் அருகே சீக்கிய மதகுரு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை; ‘விவசாயிகளின் அவலத்தை தாங்க முடியவில்லை’ என கடிதம்
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் 21–வது நாளை எட்டியுள்ளது. எனினும் தீர்வு எட்டப்படவில்லை.
சண்டிகர்,
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் 21–வது நாளை எட்டியும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
அந்தவகையில் அரியானாவின் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த சந்த் ராம் சிங் (வயது 65) என்ற சீக்கிய மதகுரு சிங்கு எல்லையில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு வந்தார். பின்னர் போராட்டக்களத்துக்கு அருகே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ‘விவசாயிகளின் அவலத்தை தாங்க முடியவில்லை’ என பஞ்சாபி மொழியில் எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விவசாயிகளின் போராட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தற்கொலை தொடர்பாக மத்திய அரசை ராகுல் காந்தி சாடியுள்ளார். பிரதமர் மோடி தனது பிடிவாதத்தை விட வேண்டும் என அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.