பிரச்சினைக்கு தீர்வு காண குழு: சுப்ரீம் கோர்ட்டு யோசனையை விவசாயிகள் நிராகரிப்பு


கோப்பு படம் (பிடிஐ)
x
கோப்பு படம் (பிடிஐ)
தினத்தந்தி 16 Dec 2020 6:50 PM GMT (Updated: 2020-12-17T00:20:40+05:30)

வேளாண் சட்டங்களால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண குழு ஒன்று அமைக்கும் சுப்ரீம் கோர்ட்டு யோசனையை விவசாயிகள் நிராகரித்து விட்டனர்.

புதுடெல்லி, 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 21-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து உள்ளதால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு குழு அமைக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் இந்த யோசனையை விவசாயிகள் நிராகரித்து விட்டனர்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 40 விவசாய அமைப்புகளில் ஒன்றான ராஷ்ட்ரீய கிசான் மஸ்தூர் சபா என்ற அமைப்பின் தலைவர் அபிமன்யு கோகர் இது குறித்து கூறுகையில், ‘கோர்ட்டு மூலம் ஒரு புதிய கமிட்டி அமைப்பது இந்த பிரச்சினைக்கு தீர்வாகாது. மத்திய மந்திரிகளுடன் நாங்கள் ஏற்கனவே நடத்திய பேச்சுவார்த்தைகளின்போதும், இதுபோன்ற கமிட்டி அமைப்பது குறித்து பேசப்பட்டது. ஆனால் இந்த 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்’ என்று தெரிவித்தார்.

இதைப்போல சங்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பை சேர்ந்த யோகேந்திர யாதவ் தனது டுவிட்டர் தளத்தில், ‘இந்த 3 சட்டங்களின் அரசியல் சாசன மதிப்பை சுப்ரீம் கோர்ட்டு தீர்மானிக்க முடியும், தீர்மானிக்கவும் வேண்டும். ஆனால் இந்த சட்டங்களின் சாத்தியக்கூறு மற்றும் விருப்பக்கூறு குறித்து நீதித்துறை முடிவு செய்ய வேண்டாம். அது விவசாயிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே உள்ள விவகாரம். சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையுடன் கூடிய பேச்சுவார்த்தை ஒரு தவறான பாதையாகும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

‘சுப்ரீம் கோர்ட்டின் இந்த யோசனை, கடந்த 1-ந்தேதி மத்திய அரசு தெரிவித்து, விவசாய அமைப்புகள் நிராகரித்த பரிந்துரையை (கமிட்டி அமைத்தல்) மீண்டும் உயிர்ப்பிப்பது ஆகும்’ எனவும் அவர் அதில் கூறியுள்ளார்.

திக்ரி எல்லையில் போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வரும் பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா உக்ரகான்) அமைப்பின் பஞ்சாப் மாநில பொதுச்செயலாளர் சுக்தேவ் சிங் கூறும்போது, ‘முதலில் இந்த 3 சட்டங்களையும் அரசு திரும்பப்பெறட்டும், அதற்குப்பிறகு அந்த குழுவில் நாங்கள் இடம்பெறுகிறோம். இந்த சட்டங்களை கொண்டு வருவதற்கு முன்னரே இதுபோன்ற குழுவை அரசு அமைத்திருக்க வேண்டும். தற்போதைய நிலையில் அதை அமைப்பதில் எந்த பொருளும் இல்லை’ என்று உறுதிபட தெரிவித்தார்.

அதேநேரம் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத், ‘சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு குறித்து ஊடகங்கள் மூலம்தான் அறிந்துகொண்டோம். அதன் உண்மைத்தன்மை மற்றும் அதற்கு அரசு தெரிவிக்கும் பதில் குறித்து தெரிந்த பின்னரே அது குறித்து பேச முடியும்’ என கூறினார். இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு யோசனையை விவசாய அமைப்புகள் நிராகரித்து இருப்பதால், போராட்டம் தொடரும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story