“எங்கள் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர கட்டாயப்படுத்துகிறார்கள்” பா.ஜ.க. தலைவர்கள் மீது மம்தா குற்றச்சாட்டு


“எங்கள் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர கட்டாயப்படுத்துகிறார்கள்” பா.ஜ.க. தலைவர்கள் மீது மம்தா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 Dec 2020 2:47 AM IST (Updated: 17 Dec 2020 2:47 AM IST)
t-max-icont-min-icon

எங்கள் கட்சி தலைவர்களை தங்கள் கட்சியில் சேருமாறு கட்டாயப்படுத்துகிறார்கள் என பா.ஜ.க. தலைவர்கள் மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

கொல்கத்தா,

மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிற மேற்கு வங்காள மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்றுவதற்கான உத்திகளை பா.ஜ.க. வகுத்து வருகிறது. இந்தநிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில், தலைமைக்கு எதிராக அதிருப்தி நிலவுகிறது. மூத்த தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் கட்சி தலைமைக்கு எதிராக வெளிப்படையாக பேசுகின்றனர். இது மம்தா பானர்ஜிக்கு கொந்தளிக்க வைத்துள்ளது.

இந்ததருணத்தில், கூச்பெஹர் நகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தனது கட்சியில் உள்ள எதிர்ப்பாளர்களை சந்தர்ப்பவாதிகள் என்று சாடினார். பண மூட்டைகளை பயன்படுத்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உடைப்பதற்கு பா.ஜ.க. முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசுகையில் அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. தலைவர்களின் தைரியத்தை பாருங்களேன். அவர்கள் எனது கட்சியின் மாநில தலைவர் சுப்ரதா பக்‌ஷியை அழைத்து தங்கள் கட்சியில் சேருமாறு கூறி இருக்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு அரசியல் மரியாதையோ, சித்தாந்தமோ கிடையாது. தங்கள் நன்மைக்காக செயல்படுகிற சந்தர்ப்பவாதிகள் ஓரிருவர் (திரிணாமுல் காங்கிரசில்) இருக்கிறார்கள். 

கட்சியில் நீண்ட காலமாக இருக்கிற பழையவர்கள்தான், உண்மையான சொத்துகள் ஆவார் கள். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை தங்கள் கட்சியில் சேருமாறு பா.ஜ.க. கட்டாயப்படுத்த முயற்சிக்கிறது. எதிர்க்கட்சிகளை உடைப்பதற்கு பா.ஜ.க., பண மூட்டைகளை பயன்படுத்துகிறது. ஆனால் சட்டசபை தேர்தலில் அவர்களை எதிர்த்து நின்று போராடி தோற்கடித்து காட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story