சர்க்கரை ஏற்றுமதிக்காக ரூ.3,500 கோடி மானியம்; மத்திய மந்திரிசபை ஒப்புதல்


சர்க்கரை ஏற்றுமதிக்காக ரூ.3,500 கோடி மானியம்; மத்திய மந்திரிசபை ஒப்புதல்
x
தினத்தந்தி 17 Dec 2020 3:43 AM IST (Updated: 17 Dec 2020 3:43 AM IST)
t-max-icont-min-icon

சர்க்கரை ஆலைகள் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ததற்காக, சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.3 ஆயிரத்து 500 கோடி மானியம் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

புதுடெல்லி, 

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடப்பு சந்தை பருவத்தில் சர்க்கரை ஆலைகள் 60 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளன. எனவே, அந்த ஆலைகளுக்கு ஏற்றுமதி மானியமாக ரூ.3 ஆயிரத்து 500 கோடி வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழு ஒப்புதல் அளித்தது. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வைத்துள்ள நிலுவையை சரி செய்யும்வகையில், இந்த மானியம் வழங்கப்படுகிறது. இத்தொகை, விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படும். இதனால் 5 கோடி விவசாயிகள் பலனடைவார்கள்’இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக மொபைல் சேவைகளுக்காக அடுத்த சுற்று ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நடத்தும் தொலைத்தொடர்பு துறையின் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இதை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

700, 800, 900, 1,800, 2,100, 2,300, 2,500 மெகாஹெர்ட்ஸ் திறன் கொண்ட அலைக்கற்றைகள் ஏலம் விடப்படும். 20 ஆண்டு காலத்துக்கு இந்த உரிமம் வழங்கப்படும். இதன் மொத்த மதிப்பு (நிர்ணயிக்கப்பட்ட விலை) ரூ.3 லட்சத்து 92 ஆயிரத்து 332 கோடி ஆகும். இதை பெறுவதன் மூலம் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க் திறனை பெருக்க முடியும். புதிய நிறுவனங்களும் சேவையை தொடங்க முடியும்.

ஏலத்தில் எடுக்கும் நிறுவனங்கள், ஏலத்தொகையுடன் பயன்பாட்டு கட்டணமாக 3 சதவீத தொகையை வழங்க வேண்டும். ஏலத்தொகையை முழுமையாகவோ அல்லது 16 வருடாந்திர தவணைகளாகவோ செலுத்தலாம். போதிய ஸ்பெக்ட்ரம் கிடைப்பதால், வாடிக்கையாளர்களுக்கு அதிக தரமான தொலைத்தொடர்பு சேவை கிடைக்கும்’இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இருதரப்பு மின்சார துறைகளில் பரஸ்பர நலன்சார்ந்த பிரச்சினைகளில் அனுபவத்தையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்ள இந்த ஒப்பந்தம் உதவும். வடகிழக்கு பிராந்தியத்தில் மாநிலத்துக்குள் மின்சார பகிர்மானத்தை வலுப்படுத்துவதற்காக, ரூ.6 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.


Next Story