வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவெடுக்க போவதில்லை : சுப்ரீம் கோர்ட்


வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவெடுக்க போவதில்லை : சுப்ரீம் கோர்ட்
x
தினத்தந்தி 17 Dec 2020 8:37 AM GMT (Updated: 2020-12-17T14:07:35+05:30)

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவெடுக்க போவதில்லை. விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.

புதுடெல்லி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை உடனடியாக அகற்ற உத்தரவிடக் கோரியும், பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், மத்திய அரசு நடத்தி வரும் பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லையா? விவசாயிகள் அமைப்புகள் தரப்பில் யார் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பவர்களின் பெயர்களை தெரிவியுங்கள், ஏனெனில் மத்திய அரசின் பேச்சு வார்த்தை பலனளிக்கவில்லை என்றால் நாடு முழுவதும் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழுவை நாங்கள் அமைக்கிறோம், இல்லையென்றால் விரைவில் இது நாடு தழுவிய பிரச்சினையாக மாறிவிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து இன்றும் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

அப்போது  பஞ்சாப் அரசு சார்பில் வழக்கறிஞர்  கூறும் போது 

பல விவசாயிகள் பஞ்சாபிலிருந்து வந்தவர்கள். ஒரு குழு பேச்சுவார்த்தையை  எளிதாக்க முடியும் என்ற நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு மாநிலத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இந்த குழுவில் யார் யார்  இருப்பார்கள் என்பதை விவசாயிகள் மற்றும் மத்திய அரசு தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார்.

அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறும் போது  போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் பெரும்பாலும் முகக்கவசம் அணியவில்லை.  அவர்கள் அதிக அளவில் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள். கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளது.  அவர்கள் கிராமங்களுக்குச் சென்று அதை அங்கே பரப்புவார்கள். விவசாயிகள் மற்றவர்களின் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்று  கூறினார்.

போராட்டங்களுக்கு தீர்வு காணும்வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என்ற உத்தரவாதத்தை அளிக்க முடியுமா?   என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்  கேள்வி எழுப்பியது  மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக அரசு வழக்கறிஞர் பதில் அளித்தார்.

விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறியதாவது:-

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவெடுக்க போவதில்லை. விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும்.

விவசாயிகளின் போராட்டம்  மற்றும் குடிமக்கள் அடிப்படை உரிமை குறித்து இன்று நாம் தீர்மானிக்கும் முதல் மற்றும் ஒரே விஷயமாக இருக்கும்.

விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது ஆனால்  குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க நினைக்கிறோம்.நகரை தடுத்து வைக்க முடியாது  . எதிர்ப்பின் விதம் நாங்கள்  கவனிக்கும் ஒன்று. குடிமக்களின்  உரிமையை பாதிக்காத வகையில் அதை சற்று மாற்றியமைக்க வேண்டும். போராட்டம் எப்படி நடக்கிறது என்று நாங்கள் மத்திய அரசிடம்  கேட்போம்.

ஒரு போராட்டம்  என்பது சொத்துக்களை அழிக்கவோ அல்லது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கவோ செய்யக் கூடாது. மத்திய அரசும்  விவசாயிகளும் பேச்சுவார்த்தை நடத்த  வேண்டும்; ஒரு பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான குழுவைப் பற்றி நாங்கள் யோசித்து வருகிறோம். அமைக்கப்படும் குழு  விவசாயிகள்  விவகாரத்தில் ஒரு தீர்வை கண்டறியும்;  இதற்கிடையில் எதிர்ப்பு  தொடரலாம்.

டெல்லியைத் தடுக்கிறார்கள் அங்கு  மக்கள் பசியுடன் இருக்கக்கூடும். விவசாயிகள் நோக்கத்தை பேச்சுவார்த்தை  மூலம் நிறைவேற்ற முடியும். போராட்டத்தில் அமர்ந்திருப்பது உதவாது . விவசாயிகள் வன்முறையைத் தூண்டக் கூடாது. இது போன்று ஒரு நகரை தடுத்து வைக்க கூடாது.

பி சாய்நாத், பாரதிய கிசான் யூனியன் மற்றும் பிறரை உறுப்பினர்களாக சேர்த்து கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரிய மனுக்களை விடுமுறைகால அமர்வு விசாரிக்கும் என தலைமை நீதிபதி கூறினார்.

Next Story