தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது, பி.எஸ்.எல்.வி. சி50 ராக்கெட்; இணையவழி கல்வி, தொலைமருத்துவம், பேரிடர் மேலாண்மை எளிதாகும்


தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது, பி.எஸ்.எல்.வி. சி50 ராக்கெட்; இணையவழி கல்வி, தொலைமருத்துவம், பேரிடர் மேலாண்மை எளிதாகும்
x
தினத்தந்தி 17 Dec 2020 8:58 PM IST (Updated: 17 Dec 2020 8:58 PM IST)
t-max-icont-min-icon

தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–50 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. இந்த செயற்கைக்கோளால் இணையவழி கல்வி, தொலைமருத்துவம், பேரிடர் மேலாண்மை ஆகியவை எளிதாகும்.

ஸ்ரீஹரிகோட்டா,

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக நாடு போராடிக்கொண்டிருந்த வேளையில் ஊரடங்கு, பொதுமுடக்கம் இந்தியாவின் விண்வெளி திட்டங்களையும் கிடப்பில் போட்டது.

கொரோனாவின் தாக்கம் மெல்ல மெல்ல குறையத்தொடங்கியபோது, நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கின. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கைக்கு நாடும், மக்களும் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில்தான் நடப்பு ஆண்டின் முதல் திட்டமாக, கடந்த மாதம் 7ந்தேதி, பி.எஸ்.எல்.வி. சி49 ராக்கெட், இந்தியாவின் இ.ஓ.எஸ்01 செயற்கைக்கோள் மற்றும் வெளிநாடுகளின் 9 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

அதை தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, இரண்டாவது திட்டமாக பி.எஸ்.எல்.வி. சி50 ராக்கெட் திட்டத்தை கையில் எடுத்தது.

இந்த ராக்கெட்டின் சிறப்பு அம்சம், இது 6 உந்துவிசை சக்தியுடன் வடிவமைக்கப்பட்டது என்பதாகும். இந்த தொழில்நுட்பத்தில் உருவான 22வது பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் இதுவாகும்.

இந்த ராக்கெட்டில் விண்வெளியில் செலுத்துவதற்காக சி.எம்.எஸ். 01 செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்தது. இந்த செயற்கைக்கோளானது, தகவல் தொடர்பு வசதிக்கானது. இந்தியாவின் 42வது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

இதன் எடை 1,410 கிலோவாகும். இதன் ஆயுள், 7 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும். இந்த செயற்கைக்கோள் மூலம் பெறப்படுகிற அலைவரிசையை இந்திய நிலப்பரப்பிலும், அந்தமான் நிகோபாரிலும், லட்சத்தீவிலும்கூட பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இணையவழி கல்வி, தொலை மருத்துவம், பேரிடர் மேலாண்மை, செயற்கைக்கோள் இணைய அணுகல் ஆகியவையும் எளிதாகும்.

பி.எஸ்.எல்.வி. சி50 ராக்கெட்டை விண்வெளியில் செலுத்துவதற்கான ‘கவுண்ட் டவுன்’ என்று அழைக்கப்படுகிற 25 மணி நேர இறங்குவரிசை ஏற்பாடுகள் நேற்று பகல் 2.41 மணிக்கு தொடங்கின.

இவை இன்று முடிவுக்கு வந்தநிலையில் சரியாக பிற்பகல் 3.41 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து சி.எம்.எஸ். 01 செயற்கைக்கோளை சுமந்தவாறு பி.எஸ்.எல்.வி. சி50 ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது.

இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்த 20 நிமிடம் 11 வினாடிகளில், பூமியில் இருந்து 545 கி.மீ. உயரத்தில் சுற்றுவட்டப்பாதையில் திட்டமிட்டபடி சி.எம்.எஸ். 01 செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது.

ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதும், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் கே.சிவன், இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை பரிமாறி கொண்டார்.

வழக்கமாக ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்து பார்வையிடவும் அனுமதி வழங்கப்படுவது உண்டு. இது கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் அந்த அனுமதி வழங்கப்படாததால் அந்த இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்த பி.எஸ்.எல்.வி. சி50 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவின் தலைவர் கே.சிவன் கூறியதாவது:–

பி.எஸ்.எல்.வி. சி50 ராக்கெட் வெற்றிகரமாக சி.எம்.எஸ். 01 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை துல்லியமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த சுற்றுவட்டப்பாதையில் செலுத்தியது. இதை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழச்சி அடைகிறேன். செயற்கைக்கோள் மிக சிறப்பாக செயல்படுகிறது. இன்னும் 4 நாட்களில் செயற்கைக்கோள் புவிசார் பரிமாற்ற சுற்றுவட்டப்பாதையில் குறிப்பிட்ட ‘ஸ்லாட்’டில் வைக்கப்படும்.

இந்த செயற்கைக்கோளானது, 11 ஆண்டுகளுக்கு முன்பாக விண்ணில் செலுத்தப்பட்ட ‘ஜிசாட் 12’ தகவல் தொடர்பு செயற்கைக்கோளுக்கு மாற்று ஆகும். இந்த செயற்கைக்கோள், திட்டமிட்டபடி அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக செய்யும் என்று நான் நம்புகிறேன்.

அடுத்து சந்திரயான் 3, ஆதித்யா எல் 1, ககன்யான் (விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவது) திட்டங்களை விரைவாக நிறைவேற்ற திட்டமிட்டிருக்கிறோம். தொடர் திட்டங்கள் கையில் உள்ளன. வழக்கம்போல இஸ்ரோ அணி சிறப்பாக செயல்பட்டு உயரும்.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story