டெல்லியில் கடும் குளிர்: சாலையில் தீ மூட்டி குளிர் காயும் மக்கள்


டெல்லியில் கடும் குளிர்: சாலையில் தீ மூட்டி குளிர் காயும் மக்கள்
x
தினத்தந்தி 18 Dec 2020 7:38 AM IST (Updated: 18 Dec 2020 7:38 AM IST)
t-max-icont-min-icon

தலைநகர் டெல்லியில் நிலவும் கடும் குளிர் காரணமாக மக்கள் அவதியுறுகின்றனர். குளிர் தாங்க முடியாத மக்கள் சாலையில் விறகு சுள்ளிகளை வைத்து தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.

புதுடெல்லி,

வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. இமயமலையில் பனிக்கட்டிகள் அதிகம் உருவாகி இருப்பதால், அங்கிருந்து கிளம்பும் உறைபனி காற்று உத்தரகாண்ட், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பலமாக வீசுகிறது. இதனால் வெப்பநிலை இயல்பை விட குறைந்து, அதிக குளிரை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று அதிகாலை 5.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது பொதுவான வெப்பநிலை ஆகும். ஆனால் சப்தர்ஜங் ஆய்வகத்தில் 4.6 டிகிரியும், டெல்லி புறநகர் பகுதியான ஆயாநகரில் 3.8 டிகிரியும், ரிட்ஜ் பகுதியில் 3.5 டிகிரியும் பதிவாகி இருக்கிறது. அனைத்து இடங்களிலும் வழக்கத்தைவிட சுமார் 3 டிகிரி வெப்பநிலை குறைந்ததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இதைப்போல நள்ளிரவில் பெய்த பனிப்பொழிவால் அதிகாலையில் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

இந்த நிலையில் வரும் நாட்களில் குளிர் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

“மார்கழி பனி மச்சியைத் துளைக்கும்” என்று பழமொழி கூறுவார்கள். டெல்லி மக்கள் தங்களை குளிரில் இருந்து காப்பாற்றிக்கொள்ள  சாலையில் விறகு சுள்ளிகளை வைத்து தீ மூட்டி அதில் அருகில் அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது.

ஒரு ஆட்டோ டிரைவர் ஒருவர் கூறுகையில், இங்கே மிகவும் குளிராக இருக்கிறது, யாரும் ஆட்டோரிக்ஷாவில் பயணம் செய்ய விரும்பவில்லை. எனவே, எங்களுக்கு எந்த வருமானம் இல்லை என்றார்.

Next Story