கேரளாவில் வருகிற 1-ந் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு
கேரளாவில் வருகிற 1-ந் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 பொது தேர்வுகள் மார்ச் 17-ந் தேதி முதல் நடத்த தீர்மானித்து உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 அரசு பொது தேர்வுகளை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 பொது தேர்வுகளை மார்ச் 17-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடத்தி முடிக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொது தேர்வுகள் நடத்தப்படும். செய்முறை பயிற்சி தேர்வுகளை அடுத்த மாதத்தில் நடத்தி முடிக்க வசதியாக அவர்களுக்கு வகுப்புகள் ஜனவரி 1-ந் தேதி முதல் ஆரம்பமாகும்.
கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் தொடங்கிய ஆன்லைன் வகுப்புகளுக்கான ரிவிஷன் மற்றும் தொடர் பயிற்சி வகுப்புகள் வருகிற 1 முதல் நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக மாடல் தேர்வுகள், மற்றும் மாணவ, மாணவிகளுக்கான கவுன்சிலிங் பள்ளிகளில் நடத்தப்படும்.
கல்லூரிகள் வருகிற 1-ந் தேதி முதல் திறக்கப்படும். காலை மற்றும் மாலை என ஷிப்ட் அடிப்படையில் 50 சதவீத மாணவர்கள் வீதம் வகுப்புகளில் பங்கேற்கலாம். மருத்துவ கல்லூரிகளில் 2-ம் ஆண்டு முதல் தொடங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story