கட்சியை வழிநடத்த ராகுல் காந்தியே தகுதியானவர் - காங்கிரஸ் உறுதி
மூத்த அதிருப்தி தலைவர்களை சோனியா காந்தி இன்று சந்திக்க உள்ள நிலையில், கட்சியை வழிநடத்த ராகுல் காந்தியே தகுதியானவர் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
புதுடெல்லி,
தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அதிருப்தி அடைந்த மூத்த தலைவர்கள், கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடந்த ஆகஸ்டு மாதம் கடிதம் எழுதினர். அதில், கட்சியில் முழுமையாக மாற்றம் செய்யப்பட வேண்டும், சுறுசுறுப்பான தலைமை வேண்டும், கட்சியை வழிநடத்தும் சக்தியாக சோனியா, ராகுல்காந்தி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில் அதிருப்தி தலைவர்கள் 23 பேரை சோனியா காந்தி இன்று சந்தித்து பேசுகிறார்.
அவர்களில், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், மேல்சபை துணைத்தலைவர் ஆனந்த் சர்மா, முன்னாள் முதல்-மந்திரிகள் பூபிந்தர் ஹுடா, பிரிதிவிராஜ் சவான் மற்றும் மணிஷ் திவாரி, விவேக் தங்கா, சசிதரூர் அடங்குவர். மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத், மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆகியோருடன், ராகுல் காந்தியும் சந்திப்பில் கலந்துகொள்ள இருக்கின்றார்.
இந்த சூழ்நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்புக்கு பிறகு கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றும், ஒரே குடும்பமாக கட்சி ஒருங்கிணைந்து நிற்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால் உள்கட்சி உரசல் ஏதும் இல்லை என்று காங்கிரஸ் தெரிவித்தாலும், தாங்கள் எழுப்பியுள்ள பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்றே அதிருப்தி தலைவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கட்சியில் நிலவும் ஐந்து நட்சத்திர கலாசாரம் குறித்து குலாம்நபி ஆசாத் சமீபத்தில் சாடியதும், வட்ட அளவில் தொடங்கி கட்சியின் அனைத்து நிலைகளிலும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கவை.
கட்சியின் தலைவராக 99 சதவீத தலைவர்களும், தொண்டர்களும் ராகுல்காந்தியையே தேர்ந்தெடுப்பார்கள் என்றும் சுர்ஜேவாலா நம்பிக்கை வெளியிட்டார். ராகுலே முன்னின்று கட்சியை வழிநடத்த வேண்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
இன்று முதல் அடுத்த மாத மத்தி வரை, கட்சியின் பல்வேறு நிர்வாகிகளை சோனியா சந்தித்து, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்க உள்ளார். கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்த ஏற்கனவே அவர் முடிவெடுத்துவிட்டார், அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்று ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
Related Tags :
Next Story